உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரின் க்ரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள கனடா மற்றும் கத்தார் அணிகள் இன்று களம் கண்டன. பி.சி. பிளேஸ் வேன்கவரில் நடந்த இந்தப் போட்டியில் கனடா அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது.
ஆட்டத்தின் 16-ஆவது நிமிடத்தில் கைல் லாரின் தனது அணிக்கு முதல் கோலை அடித்து 1-0 என்ற கணக்கில் கனடா முன்னிலை பெற்றது. தொடர்ந்து 29-ஆவது நிமிடத்தில் ஜொனாதன் டேவிட் கோல் அடிக்க கனடா 2-0 என ஆதிக்கத்தை தொடங்கியது.
மேலும், 45-ஆவது நிமிடத்தில் ஜொனாதன் டேவிட் மற்றொரு கோல் அடிக்க கனடா அணி 3-0 என்ற நிலையை எட்டியது.
ஆட்டத்தின் முதல் பாதி வரை கனடா அணி 3-0 என ஆதிக்கம் செலுத்த, இரண்டாவது பாதியில் கத்தார் கோல் கணக்கை தொடங்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
ஆட்டத்தின் இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கியதுமே இரு அணிகள் தரப்பிலும் வீரர்கள் மாற்றம் நடக்க ஆட்டத்திந் 64-ஆவது நிமிடத்தில் கனடா தனது கோல் எண்ணிக்கையை மேலும் அதிகப்படுத்தியது.
கனடா வீரர் நேதன் சலிபா கோல் அடிக்க கனடா 4-0 என முன்னேறியது.
இதைத்தொடர்ந்து ஆட்டத்தின் 75-ஆவது நிமிடத்தில் கத்தார் வீரர் முகமது மனாய் ஓன் கோல் அடிக்க கனடா 5-0 என முன்னேறியது.
ஆட்டத்தின் கடைசியில் ஜொனாதன் டேவிட் மற்றொரு கோல் அடிக்க கனடா அணி 6-0 என்ற கணக்கில் கத்தார் அணியை துவம்சம் வீழ்த்தியது.