சென்னை:
மேகேதாட்டு விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தேவையற்றது என்றும், தீர்மானத்தில் சேர்த்த எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் கோரிக்கையை திரும்பப்பெற வேண்டும் எனவும் பாமக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
இதுதொடர்பாக, அவர்கள் வெளியிட்ட அறிக்கை:
பாமக தலைவர் அன்புமணி: சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் “மேகேதாட்டு பிரச்சினைகளுக்காக தனி நடுவர் மன்றம் அமைக்க வலியுறுத்த வேண்டும்” என்ற கோரிக்கையை முதல்வர் ஏற்றுக்கொண்டதையடுத்து அந்த யோசனையையும் தீர்மானத்தில் சேர்க்கப்பட்டது.
தனி நடுவர் மன்றம் அமைக்கப்பட வேண்டும் என்ற அரசின் நிலைப்பாட்டை ஏற்க முடியாது.
மேல்மடை மாநிலங்களான கர்நாடகம், கேரளம் ஆகியவற்றில் எந்த கட்டுமானங்களை மேற்கொள்வதாக இருந்தாலும் கடைமடை பாசன மாநிலமான தமிழகத்தின் அனுமதி அவசியம் என்று காவிரி நடுவர் மன்றமும், உச்சநீதிமன்றமும் தெளிவாக தீர்ப்பளித்துள்ளன.
அவ்வாறு இருக்கும் போது, மேகேதாட்டு அணை விவகாரத்துக்கு தீர்வு காண புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு திரும்ப பெறவேண்டும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம்: மேகேதாட்டு அணை விவகாரத்தில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கொடுத்த திருத்தம் என்ன என்று பேரவைக்கு சொல்லாமல், அதை நாங்கள் ஏற்றுக்கொண்டு தீர்மானத்தை நிறைவேற்றுகிறோம் என்கிற அணுகுமுறை, சட்டப்பேரவை விதிகளுக்கு புறம்பானது.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கொண்டுவந்த திருத்தத்துக்கு ஆதரவு இல்லை.
எனவே, நாளை (இன்று) அவை கூடியவுடன், “தானாக முன்வந்து இந்தத் திருத்தத்தைத் திரும்பப்பெறுகிறோம்” என்ற தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்.