சென்னை:
திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகுவதாக வைகோ அறிவித்த அடுத்த 24 மணி நேரத்துக்குள், மதிமுகவின் மூத்த தலைவர்கள் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் திமுகவில் நேற்று அதிகாரப்பூர்வமாக இணைந்தனர்.
கடந்த 2022-ம் ஆண்டு மதிமுகவுக்குள் தனது மகன் துரை வைகோவை அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கொண்டு வந்ததோடு, அவருக்கு முதன்மைச் செயலாளர் பதவியையும் வழங்கினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கட்சியின் மூத்த நிர்வாகிகள் திருப்பூர் துரைசாமி, டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், புலவர் செ.செவந்தியப்பன், பொடா அழகுசுந்தரம் உள்ளிட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதிருப்தி நிர்வாகிகள் பலரும் நீண்ட நாட்களாகவே திமுகவில் இணைய முயற்சி செய்து வந்தனர்.
ஆனால், திமுக கூட்டணியில் மதிமுக நீடித்ததால், அதிருப்தியாளர்களைக் கட்சியில் இணைக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து மறுத்து வந்தார்.
இந்நிலையில், திமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற மதிமுக பொதுக்குழு கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து மதிமுக அதிருப்தி நிர்வாகிகளை இணைத்துக் கொள்ள திமுக தலைமை பச்சைக் கொடி காட்டியது.
இதனைத் தொடர்ந்து நேற்று அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினைச் சந்தித்த மதிமுக முன்னாள் மாநில, மாவட்ட நிர்வாகிகள் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்.
முக்கியமாக, மதிமுகவின் மூத்த தலைவர்களான புலவர் செ. செவந்தியப்பன், டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், பொடா அழகுசுந்தரம், ஆர்.எம்.எஸ். சேகர், விடுதலைவேந்தன், டி.ஆர்.ஆர்.மதியழகன் என சிவகங்கை, திருவள்ளூர், விருதுநகர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த வழக்கறிஞர்கள், முக்கிய நிர்வாகிகள் 150-க்கும் மேற்பட்டோர் திமுகவில் ஐக்கியமாகினர்.
அழகுசுந்தரம், புலவர் செவந்தியப்பன் ஆகியோர் வைகோவுடன் பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஓராண்டுகளுக்கும் மேலாகச் சிறைவாசம் அனுபவித்தனர்.
“தமிழகத்தில் எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம். நாம் அதற்கு 100 சதவீதம் தயாராக இருக்க வேண்டும்’” என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அக்கட்சி தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் பா.பெஞ்சமின், அண்மையில் திமுகவில் இணைந்தார்.
இதையடுத்து, அவரது தலைமையில் ஆதரவாளர்கள் திமுகவில் இணையும் நிகழ்ச்சி, சென்னை வானகரத்தில் நேற்று நடைபெற்றது. கட்சியில் இணைந்தவர்களை வரவேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மகளிர் உரிமைத் தொகை போன்ற மக்கள் நலத் திட்டங்களை இனி யாராலும் மக்களிடமிருந்து பறிக்கவோ, நிறுத்தவோ முடியாது.
அந்த திட்டங்கள் தமிழகத்தில் இருக்கிற வரை, இந்த ஸ்டாலினின் பெயரும் மக்கள் மனதில் நிலைத்திருக்கும். அதுதான் இந்த இயக்கத்துக்கும், உங்களுக்கும் பெருமை.
தமிழகத்தில் தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். 3 அல்லது 6 மாதங்கள் கழித்துகூட தேர்தல்வரலாம்.
ஏனெனில், தற்போது உள்ள புதிய ஆட்சி மக்களின் முழுமையான பெரும்பான்மையோடு வெற்றி பெற்றது அல்ல. எப்போது தேர்தல் வந்தாலும் நாம் 100 சதவீதம் தயாராக இருக்க வேண்டும்.
திமுகவின் வெற்றிக்காக இந்த நிமிடம் முதலே உழைக்கத் தொடங்குங்கள் என்று அவர் பேசினார்.