சென்னை:
“ரூ.30 முதல் ரூ.40 கோடி பணம் கொடுத்து எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் மு.க.ஸ்டாலின் அரசியலை விட்டே ஒதுங்க வேண்டும்,” என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “தவெக எம்எல்ஏக்களை தொடர்புகொண்டு ரூ.50 கோடி வரை பேரம் பேசுகின்றனர். 40 நாட்களாக திமுகவினர் தொடர்பு கொள்ளாத எம்எல்ஏக்களே இல்லை.
அனைவரையும் ஒவ்வொரு வழியில் தொடர்பு கொள்கிறார்கள். இதை சட்டப்பூர்வமாக எதிர்க்கொள்வோம்.
இதனால்தான் ஸ்டாலின் 30 நாள் என சொல்கிறார். சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத தீர்மான கொண்டு வர இருக்கிறோம்; அதில் நீங்கள் எங்களுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
சில எம்எல்ஏக்கள் மிரட்டப்பட்டுள்ளனர். இது குறித்து ஒரு எம்எல்ஏ புகாரளித்துள்ளார். பேரம் பேசியவர்கள் செந்தில் பாலாஜி, அவரது சகோதரருக்கு நெருக்கமானவர்கள்.
மக்கள் இதை கவனிக்க வேண்டும். மக்களிடமிருந்து லட்சக் கணக்கில் கொள்ளையடித்துட்டு, எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயற்சிக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமியும் இதற்கு துணை போகிறார். திமுக, அதிமுக இணைந்து ஆட்சியமைக்க முயற்சி நடக்கிறது. இதனால் நிர்வாகிகள் வெளியேறுகிறார்கள். தமிழக வெற்றிக் கழகம் குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை.
குதிரை பேரத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரையும் காவல்துறை கைது செய்ய வேண்டும். வேறு வழியில் எங்கள் மீது புகார் கொடுக்கிறார்கள். ரூ.30 முதல் ரூ.40 கோடி பணம் கொடுத்து எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க ஸ்டாலினுக்கு வெட்கமாக இல்லையா?. மக்கள் உங்களுக்கு எதிராக தீர்ப்பளித்துவிட்டனர். கூட்டணிக் கட்சிகளும் உங்களை விட்டு விலகிவிட்டனர்.
எடப்பாடியை முதல்வராக்க வேண்டுமென ஒவ்வொரு கூட்டணி கட்சி தலைவரிடமும் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். இதைவிட ஒரு கேவலமான செயல் உள்ளதா?. அதிலும் அவர்கள் தோல்வி அடைந்துவிட்டனர். மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளனர். உங்களைப் போல ஒரு தொகுதிக்கு ரூ.70 கோடி செலவு செய்தோ அல்லது ஓட்டுக்கு ரூ.2000 கொடுத்தோ நாங்கள் வாக்கு பெறவில்லை.
கடந்த 5 ஆண்டுகளில் நீங்கள் மக்களுக்கு செய்த தீய வேளைகளை உணர்ந்து மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். மு.க.ஸ்டாலின் அரசியலை விட்டே ஒதுங்கிவிட வேண்டும். இதுவரை ஒரு முதல்வர் வேட்பாளர் தோற்றிருக்கிறாரா? இதைவிட ஒரு கேவலம் இருக்கிறதா? இது தான் மக்கள் கொடுத்த பாடம்.
மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொண்டு, அரசியலை விட்டு விலகுங்கள் அல்லது திமுக – அதிமுகவை இணைத்துக் கொண்டு உங்களுக்கான அரசியல் ஆதாரத்தை தேடிக் கொள்ளுங்கள். எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கவா, திமுக தொண்டர்கள் வேலை செய்தனர். அதிமுகவில் அரசியல் எதிர்காலம் இல்லை என நினைப்பவர்கள் தவெகவில் இணைகின்றனர். இதற்கான சூழலை உருவாக்கியது பழனிசாமியும், ஸ்டாலினும் தான்.
உதயநிதி அரசியல்வாதியாக பொதுவெளியில் கூட வரமுடியவில்லை. நீங்களும் அவருக்கு 5 ஆண்டுகள் பயிற்சி அளித்தீர்கள். உதயநிதி, ஸ்டாலின் தலைமையிலான அரசு என எங்கும் சொன்னதில்லை; திராவிட மாடல் அரசு என்று தான் சொல்லியிருக்கிறார். திமுகவின் அத்தியாயம், எதிர்காலம் இத்தோடு முடிந்துவிட்டது.
35 கோடி ரூபாய் பேரம் பேசியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதற்கான ஆதாரம் உள்ளது. நாங்கள் ராஜினாமா செய்தவர்களிடம் பேரம் பேசவில்லை. ராஜினாமா செய்வது அவர்களின் தனிப்பட்ட முடிவு” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.