மும்மொழிக் கொள்கை என்பது மாணவர்கள், பெற்றோர்கள் மீதான கொடூரத் தாக்குதல்; இந்தியாவின் ஒற்றுமையை சிதைக்கும்… மாணிக்கம் தாகூர்!!

சென்னை:
“மும்மொழிக் கொள்கை என்பது மாணவர்கள், பெற்றோர்கள் மீதான கொடூரத் தாக்குதல்.

இந்தியாவின் ஒற்றுமையை சிதைக்கும் ஆபத்தான விளையாட்டை மோடி அரசு கைவிட வேண்டும்” என தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “2014-ம் ஆண்டு நரேந்திர மோடி தலைமையில் பாஜக அரசு பொறுப்பேற்றது முதல் மதம், மொழியை வைத்து இந்திய மக்களிடையே பிரித்தாளும் சூழ்ச்சியை கையாண்டு வருகிறது.

‘ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம்” என்ற ஆர்எஸ்எஸ்ஸின் கொள்கையை நோக்கியே, கடந்த 12 ஆண்டுகளாக மோடி அரசு செயல்பட்டு வருகிறது.

இந்தியாவில் கல்வி பொதுப்பட்டியலில் உள்ளது. அதன்படி, மாநில அரசுகளுக்கும் கல்வித்துறையில் அதிகாரம் உள்ளது. பெரும்பாலான மாணவர்கள் மாநில அரசுகள் நடத்தும் பள்ளிகளில் தான் படிக்கின்றனர்.

ஆனாலும் மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல், அவர்களின் கடுமையான எதிர்ப்புகளை ஒரு பொருட்டாக மதிக்காமல், சர்வாதிகார மனப்பான்மையுடன் தேசிய கல்விக் கொள்கையை மோடி அரசு இறுதி செய்தது.

அதன்படி, இந்த (2026-2027) கல்வியாண்டு முதல் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 6ம் வகுப்பிலிருந்து மும்மொழி கொள்கை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு 9ம் வகுப்பு மாணவர்களும் மும்மொழியை படிக்க வேண்டும் என சி.பி.எஸ்.இ. அறிவித்திருந்தது. அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால் 6ம் வகுப்பில் இருந்து மும்மொழி என பின்வாங்கியி ருக்கிறார்கள்.

மாணவர்கள், பெற்றோர்கள் மீதான இந்த துல்லிய, கொடூரத் தாக்குல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சி.பி.எஸ்.இ. பள்ளிகளில், பயிற்று மொழி ஆங்கிலம், இரண்டாவது மொழியாக தமிழ் உள்ளது. இதுவரை மூன்று மொழிகளை கற்பித்த சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பிரெஞ்சு. ஜெர்மன் போன்ற வெளிநாட்டு மொழிகளை கற்பித்தனர்.

இது உலகளாவிய வேலைவாய்ப்புகளை பெற உதவியது. ஆனால், இப்போது மூன்றாவது மொழி இந்திய மொழியாக இருக்க வேண்டும் என்ற கட்டாயத்தால், இந்தி அல்லது சமஸ்கிருதம் படிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில், இந்த இரு மொழிகளுக்குத் தான் ஆசிரியர்கள் உள்ளனர்.

இது மாணவர்கள், பெற்றோர்களிடம் குழப்பத்தையும், பதற்றத் தையும் ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு நடத்தும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், பயிற்று மொழி ஆங்கிலம், இரண்டாவது மொழியாக இந்தி உள்ளது.

மோடி அரசு வந்த பிறகு மூன்றாவது மொழியாக சமஸ்கிருதம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மூன்றாவது மொழியாக பள்ளி அமைந்துள்ள மாநிலத்தின் மொழியை வைக்க கூட பாசிச மோடி அரசுக்கு மனமில்லை. எவ்வளவு பெரிய அக்கிரமம் இது?.

மூன்றாவது மொழி என்பது மாணவர்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தக்கூடியது என்பது உலகம் முழுவதும் உள்ள கல்வியாளர்களின் கருத்து.

தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழிக் கொள்கையாலும், பெரும் அழுத்தத்தை தராத மாநிலப் பாடத் திட்டத்தாலும்தான் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் கல்வித் துறையில் பெரும் சாதனைகளை நிகழ்த்தியுள்ளன.

கல்வியில் மட்டுமல்லாது, சமூக, பொருளாதார ரீதியாக தமிழ்நாடு வளர்ச்சி அடைந்ததற்கு இரு மொழிக் கொள்கையே காரணம்.

ஆனால், தங்களது குறுகிய அரசியல் காரணங்களுக்காக, இந்தி, சமஸ்கிருதத்தை இந்தியாவின் மொழியாக்க வேண்டும் என்பதற்காக, மாணவர்களின் எதிர்காலத்தை பாழ்படுத்தும் ஆபத்தான விளையாட்டை மோடி அரசு துவங்கியிருக்கிறது. இதைவிட மோசமான, அறுவெறுக்கத்தக்க, பாசிச செயல்பாடு எதுவும் இருக்க முடியாது.

முன்னாள் பிரதமர் நேரு அளித்த உறுதிமொழியின் அடிப்படையில், இந்தி பேசாத மக்கள் விரும்புகிற வரை இந்தியுடன் ஆங்கிலமும் ஆட்சி மொழியாக இருக்கும் என்று கூறப்பட்டு, அதற்கு முன்னாள் பிரதமர்கள் லால்பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோர் சட்டப்பாதுகாப்பு வழங்கினார்கள். அதனடிப்படையில் இந்தி பேசாத மாநிலங்கள் மீது இந்தி மொழி திணிப்பு தவிர்க்கப்பட்டது.

ஆனால், ஒன்றிய பாஜக அரசு நேரடியாக இந்தி திணிப்பு செய்கிற அதேநேரத்தில் மறைமுகமாகவும் இந்தி திணிப்பை மேற்கொண்டு வருகிறது.

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின்படி நடைபெறுகிற பள்ளிகளில் இந்தியோடு, சமஸ்கிருதமும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்புச் சட்டத்தில் 14-வது அட்டவணையில் கூறியுள்ள தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகள் புறக்கணிக்கப்பட்டு வருகிறது.

இந்தி பேசாத மக்கள் இந்தியை படித்தால் இந்தி பேசுகிற மாநில மக்கள் தமிழ் உள்ளிட்ட மொழிகளை படிக்க வாய்ப்பிருக்கிறது என்று கூறுவது ஏமாற்று வேலையாகும்.

ஏனெனில், அங்கே தமிழ் உள்ளிட்ட மொழிகளை கற்பிக்க ஆசிரியர்களோ, கட்டமைப்பு வசதிகளோ இல்லை. இந்த வாதத்தை வைத்துக் கொண்டு இந்தி பேசாத மக்கள் மீது இந்தியையும், சமஸ்கிருத மொழியையும் திணிக்கிறார்கள்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை, மொழி திணிப்பை எதிர்க்கிற அதே வேளையில் ஒரு மொழியாக, விருப்பப் பாடமாக படிக்க விரும்புவது தவறில்லை.

அந்த அடிப்படையில் மும்மொழிக் கொள்கை என்பது, இந்தி பேசாத மக்களை கடுமையாக பாதிக்கிற வகையில் தான் தேசிய கல்விக் கொள்கை அமைந்துள்ளது.

எனவே, சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் மும்மொழி கட்டாயம் என்ற அறிவிப்பை மோடி அரசு திரும்பப் பெற வேண்டும். பள்ளிக் கல்வியை 100 சதவிகிதம் மாநில அரசுகளிடம் விட்டுவிட வேண்டும்.

அவர்களால் தான் உள்ளூர் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப கொள்கைகளையும், பாடத்திட்டங்களையும் வகுக்க முடியும்.

மும்மொழிக் கொள்கை என்பது மிகமிக ஆபத்தானது. மாணவர்களை பாதிப்பதோடு, இந்தியாவின் ஒற்றுமை, சமூக நீதி, மதச்சார்பின்மை கொள்கைகளில் பாதிப்பை ஏற்படுத்தும். இந்தியாவின் ஒற்றுமையை சிதைக்கும்.

இதையும் மீறி இந்தி, சமஸ்கிருதத்தை திணித்தே தீருவோம் என்றால், மோடி அரசு அதற்கான விலையை கொடுக்க வேண்டியிருக்கும் என எச்சரிக்க விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *