லாஸ் ஏஞ்சல்ஸ்:
பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் கால் இறுதி சுற்றை எட்டி உள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸ் மைதானத்தில் நாளை அதிகாலை 12.30 மணிக்கு நடைபெறும் 2-வது கால் இறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான ஸ்பெயின், பெல்ஜியம் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
2010-ம் ஆண்டு சாம்பியனான ஸ்பெயின் அணி நடப்பு தொடரில் லீக் சுற்றில் ஒரு டிரா, 2 வெற்றிகளை பதிவு செய்திருந்தது. தொடர்ந்து நாக் அவுட் சுற்றில் ஆஸ்திரியாவை 3-0 என தோற்கடித்து இருந்தது. இதன் பின்னர் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் 1-0 என்ற கணக்கில் போர்ச்சுகலை வென்றிருந்தது.
வலுவான ஃடிபென்ஸ் காரணமாக ஸ்பெயின் அணி நடப்பு தொடரில் இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடி உள்ள நிலையில் எதிரணியிடம் இருந்து ஒரு கோல் கூட வாங்கவில்லை.
கால் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள 8 அணிகளில் ஸ்பெயின் மட்டுமே எதிரணியை ஒரு கோல் அடிக்க விடவில்லை.
பெல்ஜியம் அணி போராடியே கால் இறுதி சுற்றுக்குள் நுழைந்துள்ளது. அந்த அணி லீக் சுற்றில் 2 ஆட்டங்களை டிரா செய்த நிலையில் கடைசி ஆட்டத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தியே நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தது.
நாக் அவுட் சுற்றில் பெல்ஜியம் அணி செனகலுக்கு எதிராக 0-2 என்ற கோல் கணக்கில் பின்தங்கிய நிலையில் இருந்து மீண்டு வந்து 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றிருந்தது.
இதையடுத்து நடைபெற்ற ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் தொடரை இணைந்து நடத்தும் அமெரிக்க அணியை 4-1 என்ற கணக்கில் பந்தாடியிருந்தது பெல்ஜியம் அணி.
பெல்ஜியம் அணியைப் பொறுத்தவரை, இந்த உலகக் கோப்பை தொடரானது குறிப்பாக ஒவ்வொரு நாக்-அவுட் போட்டியும் அந்த நாட்டின் புகழ்பெற்ற ‘கோல்டன் ஜெனரேஷன்’ வீரர்களின் கடைசிப் போராட்டக் களமாகவே பார்க்கப்படுகிறது.
பயிற்சியாளர் ரூடி கார்சியா பெல்ஜியத்தின் மூத்த வீரர்களையே பெரிதும் நம்பியுள்ளார். அணியின் கிரியேட்டிவ் தூணாக கெவின் டி புரூய்னேவும், கோல் போஸ்ட்டின் அசைக்க முடியாத இரும்புச் சுவராக திபோ கோர்ட்டுவாவும், இறுதிக்கட்ட நேரங்களில் தாக்குதல் ஆட்டத்தில் மிரட்டியக்கூடியவராக ரொமேலு லுகாகுவும் விளங்குகின்றனர்.
பெல்ஜியம் அணி கடந்த நான்கு உலகக் கோப்பைகளில் விளையாடும் மூன்றாவது கால் இறுதிப் போட்டி இதுவாகும். உலகக் கோப்பை வரலாற்றில் ஒட்டுமொத்தமாக இது அவர்களின் நான்காவது கால் இறுதியாகும்.
இதற்கு முன்பு, பெல்ஜியம் அணி 1986-ல் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் ஸ்பெயினையும், 2018-ல் பிரேசிலையும் வீழ்த்தியிருந்தது. 2014-ல் அர்ஜென்டினாவிடம் தோல்வியைத் தழுவியது.
ஸ்பெயின் அணிக்கு கால் இறுதிச் சுற்று என்பது பெரும்பாலும் சாதகமான களமாக இருந்ததில்லை. அவர்கள் தங்களின் உலகக் கோப்பை வரலாற்றில் இரண்டு முறை மட்டுமே இந்தத் தடையைத் தாண்டியுள்ளனர் 1950-ல் இறுதி குரூப் சுற்றுக்கு முன்னேறிய ஸ்பெயின் அணி அதன் பின்னர் 60 பின்னர் ஆண்டுகள் கழித்து, 2010-ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற தொடரில் கால் இறுதி சுற்றின்போது பராகுவேவை வீழ்த்தியிருந்தது.
மிட்ஃபீல்டின் அசைக்க முடியாத பலமாக ரோட்ரியும், எதிரணியின் தடுப்பாட்டக் கோடுகளுக்கு இடையே சாதுரியமாக பந்துகளைக் கடத்தும் பெட்ரி மற்றும் டானி ஆல்மோவும், இளம் புயலான லமின் யமாலும் ஸ்பெயின் அணிக்கு பலம் சேர்ப்பவர்களாக உள்ளனர்.
கெவின் டி புரூனே: பெல்ஜியத்தின் மூத்த ஆட்ட நாயகனான இவர், டிஃபென்ஸிலிருந்து அட்டாக்கிற்கு பந்தை லாவகமாகக் கடத்தி ஆட்டத்தை வழிநடத்துவதில் வல்லவர்.
ரொமேலு லுகாகு: அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் மிரட்டிய இவர், ஸ்பெயினின் அசைக்க முடியாத டிஃபென்ஸிற்கு மிகப்பெரிய சவாலாக இருப்பார்.
ரோட்ரி: ஸ்பெயின் அணியின் மிட்ஃபீல்ட் தூணான இவர், பந்து தங்களுக்குள்ளேயே இருக்கும்படி ஆட்டத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்தி எதிரணியை நிலைகுலையச் செய்வார்.
லமின் யமால் & நிகோ வில்லியம்ஸ்: இந்த இளம் வேகப்புயல் விங்கர்கள், பெல்ஜியத்தின் இறுக்கமான தடுப்பாட்டத்தை உடைத்து கோல் அடிக்கக்கூடிய திறமை படைத்தவர்கள்.
நேருக்கு நேர்
உலகக் கோப்பை வரலாற்றில் ஸ்பெயினும் பெல்ஜியமும் இதற்கு முன்பு இரண்டு முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளன.
1986-ம் ஆண்டு நடைபெற்ற கால் இறுதிப் போட்டியில் பெனால்டி ஷூட்-அவுட் முறையில் பெல்ஜியம் அணி 5-4 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தியிருந்தது.
இதன் பின்னர் 1990-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றில் ஸ்பெயின் அணி 2-1 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வென்றிருந்தது. தற்போது 3-வது முறையாக உலகக் கோப்பை தொடரில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதுகின்றன.