சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ஸ்டீபன் பிளெமிங் விலகல்!!

சென்னை:
ஐபிஎல் கிரிக்கெட் அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ஸ்டீபன் பிளெமிங் விலகி உள்ளார்.

இந்த முடிவை சிஎஸ்கே மற்றும் பிளெமிங் தரப்பு கலந்தாலோசித்த பின்பு இறுதி செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தும் அணிகளில் ஒன்றாக உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். அந்த அணி ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. அதோடு பல்வேறு முறை பிளே-ஆப் சுற்றிலும் விளையாடி உள்ளது.

கடைசியாக கடந்த 2023-ல் ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்றது சிஎஸ்கே. அதற்கடுத்த மூன்று சீசன்களாக அடுத்த சுற்றுக்கு முன்னேறாமல் தடுமாறி வருகிறது.

இந்நிலையில், பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து பிளெமிங் விலகி உள்ளார்.

53 வயதான ஸ்டீபன் பிளெமிங், கடந்த 2008 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். அதன் பின்னர் அணியின் தலைமை பயிற்சியாளர் ஆனார்.

2009 சீசன் முதல் 2026 சீசன் வரையில் அந்தப் பொறுப்பில் அவர் தொடர்ந்தார். இதில் ஐபிஎல் பட்டம் மட்டுமல்லாது சாம்பியன்ஸ் லீக் பட்டமும் இரண்டு முறை சிஎஸ்கே வென்றுள்ளது.

12 முறை பிளே-ஆப் மற்றும் 10 முறை ஐபிஎல் இறுதிப் போட்டியில் அவரது பயிற்சியின் கீழ் சிஎஸ்கே விளையாடி உள்ளது.

இதோடு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வகித்து வரும் எஸ்ஏ20 தொடரில் ஜேஎஸ்கே அணி மற்றும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி பயிற்சியாளராகவும் பிளெமிங் செயல்பட்டார்.

இந்த நிலையில்தான் சிஎஸ்கே பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகி உள்ளார்.

“18 ஆண்டுகள் என்பது விளையாட்டு வாழ்வில் என்றென்றும் மறக்க முடியாத ஒன்று. நன்றியுடன் விடைபெறுகிறேன். பயிற்சியாளராக எனது பயணத்தில் சிஎஸ்கே உடனான பயணம் சிறப்பானது.

அதன் மூலம் நாங்கள் சாதித்ததை எண்ணி பெருமை கொள்கிறேன். அந்த நினைவுகள் எனது நெஞ்சில் என்றும் நிலைத்திருக்கும்” என்று பிளெமிங் தெரிவித்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *