தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு தர வாய்ப்புள்ளது – மத்திய இணை அமைச்சர்!!

சென்னை:
“தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு தர வாய்ப்புள்ளது” என்று மத்திய அமைச்சர் இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சேப்பாக்கத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே சமூக நீதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா, தொகுதி மறுவரையறை மசோதா கொண்டுவரப்படும்.

கடந்த முறை இந்த மசோதா நிறைவேற்ற முடியாமல் போனதற்கு முக்கிய காரணம் காங்கிரஸ்தான்.

இந்த முறை பலம் அதிகமாக உள்ளது, தற்போது திமுக காங்கிரஸ் இடையே மோதல் நிலவுகிறது, மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸைச் சேர்ந்த 20 எம்.பி.க்கள் என்டிஏவுக்கு ஆதரவளித்துள்ளார்கள். நிச்சயமாக இந்த முறை இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்படும்.

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்க்கு பெரும்பான்மை கிடைக்காதபோது அதிமுக தலைமையிலான கூட்டணியிடம் ஆதரவு கேட்பார் என நினைத்தோம். ஆனால் அவர் சிறுசிறு கட்சிகளை ஒன்று சேர்த்து ஆட்சி அமைத்துள்ளார்.

அதிமுக தற்போது பிரிந்திருப்பதால் பலம் இல்லாமல் உள்ளது. ஆகையால் தான் இந்தத் தேர்தலில் நாங்கள் தோல்வி அடைந்தோம். அதிமுக ஒன்றிணைய வேண்டும்.

அடுத்த தேர்தலில் அதிமுக பலம் பெற்று அனைவரும் ஒன்றிணைந்து பலமாக போட்டியிடுவோம்.

தற்போது திமுக காங்கிரஸ் ஒன்றாக இல்லை. இந்தியா கூட்டணியை விட்டு திமுக வெளியேறிவிட்டது, ஆகையால் காங்கிரஸின் முடிவுகளுக்கு திமுக ஒத்துழைப்பு தராது என நம்புகிறேன்.

இந்த மசோதாவுக்கு ஆதரவு தருவது தொடர்பாக பாஜக தலைவர்கள், திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.திமுக இந்த மசோதாவுக்கு ஆதரவு தரலாம். அல்லது, மசோதாவை புறக்கணிக்கலாம்” என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *