மதுரை:
நான் சொல்வதை தவெக அரசு கேட்கிறது என்பது உள்ளிட்ட பல கட்டுக்கதைகளை பரப்புகின்றனர் என விசிக தலைவர் திருமாவளவன் கூறினார்.
மதுரையில் நேற்று நடந்த கட்சியின் மண்டல செயற்குழு கூட்டத்தில் அவர் பேசியதாவது:
தமிழர்களை ஒருங்கிணைக்கவிடாமல் சாதிகள் தடுக்கின்றன. பிற கட்சியிலிருந்து விலகுவோர் விசிகவில் சேருவதில்லை. நாம் தமிழர், தேமுதிகவில் இருந்து விலகுவோர் கூட அதிமுக, திமுகவுக்குச் செல்கின்றனர்.
சாதிய, மதவாதிகள் விசிகவை தனிமைப்படுத்த துடிக்கின்றன. தற்போது தவெக அமைச்சரவையில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 8 பேருக்கு அமைச்சர் பதவி, ஒருவருக்கு துணை சபாநாயகர் பதவி என 9 பேருக்கு முதல்வர் விஜய் வாய்ப்பு கொடுத்துள்ளதாக சமூக ஊடங்களில் பரப்புகின்றனர்.
வெறுப்பை ஏற்படுத்த முயற்சி: இதன்மூலம் பிற சமூக மக்களிடம் தவெக அரசுக்கு எதிராக வெறுப்பை ஏற்படுத்தும் விதமாக திட்டமிட்டு கருத்துகளை திணிக்கின்றனர்.
20 ஆண்டுகள் திமுக கூட்டணியில் தொடர்ந்து பயணித்த நிலையில் அங்கே பெரிதாக நாங்கள் எதுவும் சாதிக்கவில்லை.
தவெக அரசில் திருமாவளவனுக்கு வரவேற்பு கொடுக்கப்படுகிறது. நான் சொல்லி ஒரு அதிகாரிக்குபதவி வழங்கப்படுகிறது.
அவர் சொன்னால் அரசு கேட்கிறது என்றெல்லாம் பலர் பரப்புகின் றனர். அவர்கள் சொல்வது எல்லாம் கட்டுக்கதைகள். நான் சொல்லி ஒரு போலீஸ் அதிகாரிக்கு பதவி கொடுத்திருந்தால், அவரை ஏன் அப்பதவியிலிருந்து மாற்றினார்கள்? இவ்வாறு அவர் பேசினார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறியதாவது: நாடாளுமன்ற கூட்டத்தொடரில், தொகுதி மறுவரையறை மசோதா, பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை மத்திய பாஜக அரசு நிறைவேற்ற இருப்பதாக தெரிகிறது. இந்த விவகாரத்தில் இண்டியா கூட்டணியின் நிலைப்பாட்டையொட்டி, தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்ப்போம்.
நாகர்கோவில் சிறையில் சபரிவர்மன் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். பழநி கோயில் நிலமோசடி விவகாரத்தில் முதல்வர் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு கூறினார்.