சென்னை:
அரசு பேருந்து கட்டணத்திலேயே 500 ஆம்னி பேருந்துகளை இயக்கத் தயாராக உள்ளதாக ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் மற்றும் ஆபரேட்டர்கள் சங்கத்தினர் நேற்று சந்தித்துப்பேசினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் சங்கத்தின் தலைவர் பாண்டியன் கூறியதாவது: விழாக்காலங்களில் கட்டண உயர்வு என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து பல்வேறு ஆண்டுகளாக வைக்கப்பட்டு வருகிறது.
அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், எங்கள் சங்கத்தைச் சேர்ந்த 500 பேருந்துகள் ஆண்டு முழுவதும் அரசு பேருந்து கட்டணத்திலேயே இயக்குவதற்கு அனுமதி கோரி விண்ணப்பம் கொடுத்துள்ளோம்.
500 பேருந்துகளை அரசு பேருந்து கட்டணத்திலேயே இயக்கத் தயாராக இருக்கிறோம் என்று கூறியுள்ளோம். முடிவு செய்து சொல்வதாக கூறியிருக்கிறார்கள்.
ஆம்னி பேருந்துகளுக்கும் சுற்றுலா பேருந்துகளுக்கும் தனித்தனியாக பெர்மிட் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளோம்.
அது பரிசீலனையில் இருப்பதாக கூறியுள்ளார். சுற்றுலா பேருந்துகளுக்கு அனுமதி கொடுத்தால் சுற்றுலா வளர்ச்சி அடையும். தற்போது ஒரு ரூபாய் லஞ்சம் இல்லாமல் 40 பேருந்துகளுக்கு பெர்மிட் கிடைத்துள்ளது.
கடந்த ஆட்சியில் இதே பெர்மிட் வாங்க ரூ.5 லட்சம் கொடுத்தோம். ஆர்டிஒ அலுவலகத்தில்தான் முதல் ஊழலே இருக்கும், ஆனால், இப்போது யாருமே லஞ்சம் கேட்பது இல்லை.
இந்த மாற்றத்தை நாங்கள் வரவேற்கிறோம். முன்பு அமைச்சர்களிடம் போய்விட்டுத்தான் வரவேண்டும். இப்போது அதிகாரிகளே கொடுக்கிறார்கள்.
இந்த மாதிரி மாற்றம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்போது எல்லா வேலைகளும் எந்த லஞ்சமும் இல்லாமல் நடக்கிறது.
அதிகாரிகளை மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். இதனால், இடைத்தரகர்களுக்கு வேலை நடப்பது இல்லை.
இடைத்தரகர்கள் மறுபடியும் பணம் கொடுக்க முயற்சி செய்கிறார்கள். அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்காத பட்சத்தில் பொய்யான தகவலை சொல்லி இடமாற்றம் செய்ய வைக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.