பழநியில் ரூ.100 கோடி மதிப்புள்ள நில மோசடி தொடர்பாக சார் பதிவாளர், நிலத்தை விற்றவர், வாங்கியோர் மற்றும் சாட்சி கையெழுத்திட்டவர்களின் வீடுகளில் சிபிசிஐடி போலீஸார் சோதனை!!

திண்டுக்கல்:
பழநியில் ரூ.100 கோடி மதிப்புள்ள நில மோசடி தொடர்பாக சார் பதிவாளர், நிலத்தை விற்றவர், வாங்கியோர் மற்றும் சாட்சி கையெழு த்திட்டவர்களின் வீடுகளில் சிபிசிஐடி போலீஸார் அதிகாலை 4 மணி முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழநி மலை அடிவாரத்தில் பூங்கா சாலையில் தண்டபாணி சுவாமிகள் மடத்துக்கு சொந்தமான 1.40 ஏக்கர் நிலம் உள்ளது.

ரூ.100 கோடி மதிப்பிலான இந்த நிலம் கடந்த ஜூலை 6-ம் தேதி ரூ.2 கோடிக்கு சட்டவிரோதமாக இரு தனிநபர்களுக்கு பத்திரப் பதிவு செய்யப்பட்டது.

முறைகேடாக பதிவு செய்து கொடுத்ததாக சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், மாவட்ட பதிவாளர் சசிகலா ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

சட்டவிரோதமாக பத்திரப் பதிவு செய்யப்பட்டதாக பழநி கோயில் இணை ஆணையர் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில், பத்திரப் பதிவை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, சிபிசிஐடி டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையிலான போலீஸார் கடந்த 2 நாட்களாக பழநி தேவஸ்தான அலுவலகம், பத்திரப் பதிவு அலுவலகத்தில் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், இன்று ச(ஜூலை 18) அதிகாலை 4 மணி முதல் திண்டுக்கல்லில் உள்ள சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் வீடு, நிலத்தை விற்றவர், வாங்கியவர்களில் ஒருவரான பழநி டி.கே.என். புதூரைச் சேர்ந்த சேதுபதி வீடு, அவரது உறவினர்கள், சாட்சி கையெழுத்திட்டவர்களின் வீடுகள் மற்றும் ஒட்டன்சத்திரத்தில் உள்ள பத்திர எழுத்தர், நிலத்தரகர் உட்பட 10-க்கும் மேற்பட்டோரின் வீடுகளில் சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் சந்தானலட்சுமி தலைமையில் சிபிசிஐடி போலீஸார், 3 குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

பத்திரப் பதிவு மோசடி வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் சோதனை நடத்தி வருவது திண்டுக்கல் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *