புது டெல்லி:
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று காலை சலசலப்புடன் தொடங்கியது.
அவை கூடிய சில நிமிடங்களிலேயே நீட் வினாத்தாள் கசிவு மற்றும் ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்தில் தடியடி நடத்தப்பட்டது குறித்து விவாதிக்கக் கோரி மக்களவையில் எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டன.
மாநிலங்களவையில், எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்த விவகாரங்களை எழுப்பியதுடன், டெல்லியில் நடைபெறும் போராட்டங்களை அரசு ஒடுக்க முயல்வதாகவும் குற்றம் சாட்டினார்.
மேலும், இரு அவைகளிலும் ராமர் கோயில் காணிக்கை திருட்டு விவகாரம் குறித்தும் கேள்வி எழுப்பினர்.
இரு அவைகளிலும் கூச்சல் குழப்பம் நிலவியதால், அவைகள் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.
இருப்பினும், மீண்டும் அவைகள் கூடிய பிறகும் எதிர்க்கட்சிகள் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்ததால், இரு அவைகளும் மீண்டும் மதியம் 12.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.
அதன்பின்னர் இரு அவைகளும் கூடியதும் மேற்கண்ட விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், மாநிலங்களவை முற்பகல் 12: 50 மணி வரையிலும், மக்களவை நண்பகல் 1 மணி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டது.
அதன்பின்னர் இரு அவைகளும் கூடியதும் அமளி தொடர்ந்ததால், மாநிலங்களவை மற்றும் மக்களவை மீண்டும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
பிற்பகல் 1 மணிக்கு அலுவல் ஆய்வுக் குழுவின் கூட்டத்தைக் கூட்டுமாறு மாநிலங்களவைத் தலைவர் ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார்.
கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக, நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, “மழைக்காலக் கூட்டத்தொடரின் நடவடிக்கைகளில் எதிர்க்கட்சிகள் முழு மனதுடன் பங்கேற்க வேண்டும்.
இந்த கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமாக இருக்கும் என நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.
இன்று நாடாளுமன்றம் கூடியதும் மறைந்த பிரபலங்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வின் ஒரு பகுதியாக, கத்தாரின் முன்னாள் மன்னர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி உள்ளிட்ட பல முக்கிய ஆளுமைகளுக்கு இரு அவைகளும் அஞ்சலி செலுத்தின.
மக்களவையில் அமளி நிலவிய சூழலில், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை திருத்த மசோதாவை சட்ட அமைச்சர் அர்ஜுன் மேக்வால் தாக்கல் செய்தார்.
இந்த மசோதாவானது, உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கையை, தலைமை நீதிபதி உட்பட நிரந்தரமாக 38 ஆக உயர்த்த வகை செய்கிறது.