பழநி தண்டபாணி சுவாமி மட நில மோசடி வழக்கை சிபிஐ விசாரிக்க விஎச்பி வலியு றுத்தல்!!

மதுரை:
பழநி தண்டபாணி சுவாமி மட நில மோசடி வழக்கை சிபிஐ விசாரிக்க முதல்வர் விஜய் உத்தரவிட வேண்டும் என மதுரையில் விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில இணை பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகரன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர், “பழநி தண்டபாணி சுவாமி மடத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை தனியாருக்கு தாரை வார்த்த சம்பவம் இந்துக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏழை நடுத்தர மக்கள் சிறிய இடத்தையோ வீட்டையோ விற்கவோ வாங்கவோ பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்றால் பல முக்கிய ஆவணங்களை கேட்டும், அடையாள ஆவணங்களை கேட்டும் அதிகாரிகள் கெடுபிடி செய்வர்.

ஆனால் ரூ.100 கோடி மதிப்புள்ள மடத்திற்கு சொந்தமான நிலத்தை தனியாருக்கு பத்திரப்பதிவு செய்ததில் பல முக்கிய பிரமுகர்களுக்கும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்களுக்கும் தொடர்பு இல்லாமல் இருக்காது.

அந்த நிலம் பத்திரப்பதிவு செய்ததன் பின்னணியில் உள்ள உள்ளூர் அதிகாரிகள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்தால் போதாது. இதன் பின்னணியில் உள்ள பத்திரப்பதிவுத்துறை உயர் அதிகாரிகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்த அரசியல்வாதிகள் ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்து குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனவே இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்தால், அரசியல்வாதிகள் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி திசை திருப்பக்கூடும். எனவே இந்த மடத்திற்குச் சொந்தமான நில மோசடி வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி முதல்வர் விஜய் உத்தரவிட வேண்டும்.

பத்திரப்பதிவு பின்னணியில் உள்ள அதிகாரிகள் அரசியல்வாதிகள் நிலத்தை வாங்கியவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து கைது செய்தால் மட்டுமே வருங்காலங்களில் இது போன்ற போலி பத்திரப்பதிவுகளை தடுக்க முடியும்.

குறிப்பாக கோயிலுக்கு சொந்தமான ஏராளமான நிலங்கள் இதுபோல இன்றும் ஆக்கிரமிப்பில் உள்ளன.

அவற்றையெல்லாம் கண்டறிய ஓர் உயர்மட்ட குழுவை முதல்வர் விஜய் அமைத்து தீவிர விசாரணை நடத்தவும் உத்தரவிட வேண்டும்.” என்று கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *