ஆகஸ்ட் 19, 20-ல் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென்மாநில முதல்வர்கள் மாநாடு !!

கோவளம்:
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென்மாநில முதல்வர்கள் மாநாடு ஆகஸ்ட் 19, 20-ம் தேதிகளில் சென்னையை அடுத்த கோவளத்தில் நடைபெறவுள்ளது.

அண்டை மாநிலங்களுக்கு இடையேயான உறவை சுமூகமாக பேணும்விதமாக மத்திய அரசால் மாநில முதல்வர்கள் மாநாடு நடத்தப்படுகிறது.

அதன்படி, 31-வது தென்மாநில முதல்வர்கள் மாநாடு. செங்கல்பட்டு மாவட்டம் கோவளத்தில் உள்ள பிஷர்மேன் கோவ் ஹோட்டலில் ஆகஸ்ட் 19 20 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. மாநாட்டுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை வகிப்பார்.

இதில் தமிழகம், கேரளம், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் உயரதிகாரிகள் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

இந்த கூட்டத்தில் மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு, பொருளாதார வளர்ச்சி, தொழில் முதலீடுகள், கூட்டுறவை பலப்படுத்துவது, கட்டமைப்பு மேம்பாடு, நீர்வளப் பகிர்வு, கல்வி, சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம், பேரிடர் மேலாண்மை, குற்றங்கள் தடுப்பு எல்லைப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

தற்போது காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் கர்நாடகா மற்றும் தமிழகம் இடையே முரண்பாடுகள் எழுந்த நிலையில், இந்த கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

மாநாட்டை முன்னிட்டு கோவளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மாநாடு நடைபெறும் பிஷர்மேன் கோவ் ஹோட்டல் வளாகம், கிழக்கு கடற்கரைச் சாலை மற்றும் முக்கிய சந்திப்புகளில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட உள்ளது.

விருந்தினர்கள் தங்குமிடங்கள், போக்குவரத்து வழித்தடங்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சிறப்பு பாதுகாப்பு திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும் போக்குவரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்படலாம்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *