“சில நாடுகள் பயங்கரவாதத்தை வெளிப்படையாக ஆதரிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதா என்ற கேள்வி எழுவது இயற்கையானது” – ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு !!

தியான்ஜின்:
“சமீபத்தில், ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதத்தின் மோசமான பக்கத்தைக் கண்டோம்.

இதுபோன்ற சூழ்நிலையில், சில நாடுகள் பயங்கரவாதத்தை வெளிப்படையாக ஆதரிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதா என்ற கேள்வி எழுவது இயற்கையானது” என ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) கடந்த 2001-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான், ஈரான், பெலாரஸ் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

இந்நிலையில், எஸ்சிஓ அமைப்பின் 2 நாள் உச்சி மாநாடு சீனாவின் தியான்ஜின் நகரில் நேற்று தொடங்கியது. இதில் பிரதமர் மோடி பங்கேற்றார். மாநாட்டின் ஒரு பகுதியாக, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை நேற்று பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப்பும் கலந்து கொண்ட 25-வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, “பயங்கரவாதம் என்பது எந்த ஒரு நாட்டின் பாதுகாப்பிற்கும் மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் அச்சுறுத்தல் ஆகும்.

கடந்த 40 ஆண்டுகளாக பயங்கரவாதத்தின் தாக்குதலை இந்தியா அனுபவித்து வருகிறது. சமீபத்தில், ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதத்தின் மோசமான பக்கத்தைக் கண்டோம். இந்த துக்க நேரத்தில் எங்களுடன் நின்ற நட்பு நாட்டிற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பயங்கரவாதம் தொடர்பாக எந்த இரட்டை நிலைப்பாடும் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என்பதை நாம் தெளிவாகவும் ஒருமனதாகவும் கூற வேண்டும். இந்தத் தாக்குதல் (பஹல்காம்) மனிதநேயத்தில் நம்பிக்கை கொண்ட ஒவ்வொரு நாட்டிற்கும், நபருக்கும் வெளிப்படையான சவாலாக இருந்தது.

இதுபோன்ற சூழ்நிலையில், சில நாடுகள் பயங்கரவாதத்தை வெளிப்படையாக ஆதரிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதா என்ற கேள்வி எழுவது இயற்கையானது. அனைத்து வடிவங்களிலும், வண்ணங்களிலும் பயங்கரவாதத்தை நாம் ஒருமனதாக எதிர்க்க வேண்டும். இது மனிதகுலத்திற்கு எதிரான நமது கடமை.

எஸ்சிஓ- வின் பிராந்திய பயங்கரவாத எதிர்ப்பு கட்டமைப்பின் (RATS) கீழ் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. கூட்டு தகவல் நடவடிக்கையை வழிநடத்துவதன் மூலம் அல்-கொய்தா மற்றும் அதனுடன் தொடர்புடைய பயங்கரவாத அமைப்புகளை எதிர்த்துப் போராட இந்தியா முன்முயற்சி எடுத்தது.

பயங்கரவாத நிதியுதவிக்கு எதிராக நாங்கள் எங்கள் குரலை எழுப்பினோம். அதில் உங்கள் ஆதரவிற்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எஸ்சிஓவின் இன் உறுப்பினராக இந்தியா மிகவும் நேர்மறையான பங்கைக் கொண்டுள்ளது.

எஸ்சிஓ-விற்கான இந்தியாவின் தொலைநோக்குப் பார்வை மற்றும் கொள்கை என்பது பாதுகாப்பு, இணைப்பு மற்றும் வாய்ப்பு ஆகிய மூன்று முக்கியமான தூண்களை அடிப்படையாகக் கொண்டது.” என்று அவர் கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *