புதுச்சேரி:
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை புதுச்சேரி வருகையால் பாதுகாப்புப் பணியில் ஆயிரம் போலீஸார், மத்திய ரிசர்வ் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதுவை காவல் துறைக்கு அறிவிக்கப்பட்டுள்ள ஜனாதிபதியின் வண்ண விருது வழங்கும் விழா வரும் ஆக.9-ம் ( ஞாயிற்றுக் கிழமை ) கோரிமேடு போலீஸ் மைதானத்தில் நடக்கிறது.
இவ்விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று காவல் துறைக்கு விருதுகளை வழங்குகிறார். இதற்காக நாளை சனிக்கிழமை மாலை மத்திய அமைச்சர் அமித் ஷா புதுச்சேரி வருகிறார்.
சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுவை விமான நிலையம் வரும் அமித் ஷா சாலை மார்க்கமாக ராஜீவ் காந்தி சிலை அருகே உள்ள ஓட்டல் அக்கார்டுக்கு வந்து தங்குகிறார். அங்கு அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அங்கிருந்து அவர் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை விழா நடக்கும் கோரிமேடு போலீஸ் மைதானம் செல்கிறார். இதனால், விமான நிலையம் முதல், ராஜீவ் காந்தி சதுக்கம், கோரிமேடு செல்லும் சாலைகளில் தடுப்புகள் அமைக்கும் பணிகள் செய்யப்பட்டு உள்ளது.
மத்திய அமைச்சர் வருகையையொட்டி மத்திய ரிசர்வ் படையின் 8 கம்பெனி பாதுகாப்புப் படையினர் புதுவை வந்துள்ளனர்.
புதுவை காவல்துறையை சேர்ந்த 500 போலீஸார் பாதுகாப்பு, போக்குவரத்து சீரமைப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். அவர்களுடன் ஐஆர்பின் மற்றும் ரிசர்வ் படையினர் என 1,000-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.
இதையொட்டி புதுவையில் போக்குவரத்தும் மாற்றம் செய்யப்படுகிறது.