தமிழக முதல்வரின் உழைப்பிற்கு கால் தூசிக்கு பெறாதவர்கள் எல்லாம் அவரை விமர்சிக்கின்றனர் – செந்தில்பாலாஜி!!

கோவை:
கோவையில் தமிழ் யூடியூபர்ஸ் நடத்திய பெரியார் குறித்த கருத்தரங்கில் கலந்துகொண்ட அமைச்சர் செந்தில் பாலாஜி பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை விமர்சித்தார்.

கோவை புறநகர் பகுதியில் உள்ள தனியார் திருமணமண்டபத்தில், தமிழ்நாட்டில் உள்ள அரண்செய், யூ டூ புரூட்டஸ், பேரலை, அதர்மம் உள்ளிட்ட யூடியூப் சேனல்கள் இணைந்து, பெரியார் எனும் பெரும் நெருப்பு என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்தியிருக்கின்றனர். இதில், சிறப்பு விருந்தினராக மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “சில பேர் சில நேரங்களில் தொலைக்காட்சிகளில் பேட்டி மட்டும் கொடுத்துவிட்டு கோவை ஏதோ சிலருக்கு சொந்தம் என்பது போல காட்ட முயல்கின்றனர், அது இல்லை கோவை பெரியார் மண், திராவிட மண் என்பதை கோவை மாவட்ட மக்கள் நிரூபித்து காட்டியிருக்கின்றனர்.

ஏதோ கடந்த சட்டமன்ற தேர்தலில் ஒரு வெற்றி பெற்று விட்டதால், அதுவும் சட்டமன்ற தேர்தலில் சொந்த ஊரில் விலை போகாத ஆடு, வெளியூரில் நாடாளுமன்ற நேரத்தில் வெற்றி பெற்று விடலாம் என நினைத்து வந்த போது எங்க ஊரும் பெரியார்மண்தான். தமிழகத்தில் எங்கேயும் வேலை இல்லை என உணர்த்தி அனுப்பி இருக்கின்றோம்.

நான் தான் பெரிய அறிவாளி என நினைத்து கொண்டு, தன்னை தானே சாட்டையால் அடித்து கொண்டு, செருப்பு போட மாட்டேன் என புது கதையை சொல்லும் தம்பிக்கு நான் இப்ப சொல்கின்றேன், பெரியார், அண்ணா , கலைஞர் வழியில் ஆட்சியில் வாழ்நாள் முழுக்க செருப்பே போட முடியாது, கொஞ்சம் யோசித்து சபதத்தை எடுக்கவேண்டும். அரசியலுக்கு வந்தால் இரண்டு வருடத்தில் முதல்வர் பதவிக்கு வந்துவிடலாம் என சிலர் நினைக்கின்றனர்.

அதில் செருப்பு போடாமல், சாட்டை அடித்து கொண்டவரும் ஒருவர். தமிழக முதல்வரின் உழைப்பிற்கு கால் தூசிக்கு பெறாதவர்கள் எல்லாம் அவரை விமர்சிக்கின்றனர், அதை புறந்தள்ளி அனைத்து மக்களுக்கும் திட்டங்களை தந்து கொண்டு இருப்பவர் முதல்வர்” எனக் கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *