சென்னை:
“எனக்கு மொழிப் பிரச்சினை இருப்பது உண்மைதான். அதை நான் மறுக்கவில்லை. அன்று கொஞ்சம் ஆவேசப்பட்டது உண்மைதான்.
எனக்கும் தாய்மொழி தமிழ்தான்” எனத் தெரிவித்த தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன், தனக்கு திருவாரூர், புதுச்சேரி, சென்னை, ஆர்.கே.நகர் ஆகிய 4 இடங்களுடன் உள்ள தொடர்பையும் விவரித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் மரிய வில்சனின் தமிழ் உச்சரிப்பு மற்றும் இலக்கணப் பிழை தொடர்பாக, கடையநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ ராஜேந்திரன் மற்றும் நிதியமைச்சர் மரிய வில்சன் இடையே காரசார விவாதம் நடைபெற்று, பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து இன்று சட்டப்பேரவையில் மரிய வில்சன் பேசுகையில், “முந்தைய நிதியமைச்சர் பிடிஆரையும், என்னையும் ஒப்பிட்டுப் பேசினார்கள்.
நாங்களும் இது குறித்து விவாதித்தோம். மொழி எனக்கு ஒரு பிரச்சினை தான். அதை நான் மறுக்கவில்லை. அன்று கொஞ்சம் ஆவேசப்பட்டது உண்மைதான். எனக்கும் தாய்மொழி தமிழ்தான்.
நான் வளர்ந்தது திருவாரூர், பிறந்தது புதுச்சேரி. படித்தது சென்னை. என்னை இப்போது தத்தெடுத்தது ஆர்.கே.நகர். இந்த நான்கு இடத்திலும் நான் சுற்றி சுற்றி வந்திருக்கிறேன்.
சட்டப்பேரவை உறுப்பினர்கள் நிறைய பேர் பேசினார்கள். அவை அனைத்தும் எங்களுக்கு தகவல்தான். நான் அதை மறுக்கவில்லை.
இந்த இடம் எங்களுக்கு முதல் முறை. சில விஷயங்களை திருத்திக் கொள்வோம்.
உங்களிடமிருந்தும் கற்றுக் கொள்வோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “நிதியமைச்சராக பொறுப்பேற்ற முதல் நாளே கடந்த திமுக ஆட்சியில் அரசுத் துறைகளின் வரவு செலவு கணக்குகளை தணிக்கை செய்து விரிவான அறிக்கை தயார் செய்ய முதல்வர் எனக்கு உத்தரவிட்டார்.
மூன்று துறைகளின் வரவு செலவு கணக்கு குறித்த விரிவான அறிக்கை தயார் செய்யப்பட்டு முதல்வர் மேசையில் உள்ளது.
அரசுக்கு இழப்பை பொறுத்தவரை சில லட்சங்கள் முதல் பல ஆயிரம் கோடிகளில் இருக்கலாம். அந்த அறிக்கையை முதல்வர் எப்போது வேண்டுமானாலும் வெளியிடுவார்” என்று அவர் கூறினார்.