சென்னை:
தமிழகத்தில் வீடுகள் உட்பட அனைத்து மின் இணைப்புகளிலும் மின்நுகர்வை துல்லியமாக கணக்கெடுக்கவும், மின் இழப்பை தடுக்கவும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த அனைத்து மாநில அரசுகளையும் மத்திய அரசு அறிவுறுத்தியது.
இந்நிலையில் தமிழகத்தில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை செயல்படுத்த கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் டெண்டர் கோரப்பட்டது.
பின்னர் டெண்டர் நடைமுறைகளில் நிறுவனங்களுக்கு பல சந்தேகங்கள் இருந்ததால் டெண்டர் ரத்து செய்யப்பட்டு, 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் டெண்டர் விடப்பட்டது.
ஆனால் டெண்டரில் பங்கேற்ற நிறுவனம் அதிக தொகை கோரியதால் அந்த டெண்டரும் ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து, கடந்த ஆண்டு மார்ச் 14-ம் தேதி 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் கோரப்பட்டது.
இந்த டெண்டரில் 42 நிறுவனங்கள் பங்கேற்றன, ஆனால் அந்த டெண்டர் திறக்கப்படவில்லை.
தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பின்னர் கடந்த ஆட்சிக் காலத்தில் கோரப்பட்ட டெண்டர்களில் முறைகேடு இருப்பதாகதெரிவித்து அனைத்து துறைகளிலும் சில டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் இந்த 3 கோடி ஸ்மார்ட் மீட்டர் டெண்டரும் ரத்து செய்யப்படவுள்ளது.
மேலும் வீட்டு இணைப்புகளுக்கு 56 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்கள் கொள்முதல் செய்யவும், தொழில், வணிகப்பிரிவு இணைப்புகளுக்கு 50 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்கள் கொள்முதல் செய்யவும் டெண்டர் கோரப்படவுள்ளது.
பழைய டெண்டர் ரத்து செய்வது மற்றும் புதிய டெண்டர்கள் கோருவது ஆகியவற்றுக்கு அடுத்து நடைபெறும் வாரிய கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்படவுள்ளதாக மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் மேலும் கூறியதாவது: முதற்கட்டமாக சென்னை மாநகர பகுதிகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஏற்கெனவே தியாகராய நகரில் ஒரு லட்சம் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன, இந்த மீட்டர்களில் ரேடியோ அலைவரிசை தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ள நிலையில், புதிய மீட்டர்களிலும் அதே தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்.
இதன்மூலம் மீட்டர்களில் இருந்து மின் பயன்பாட்டை மின் வாரியம் பெற்றுக்கொள்ளும்.
ஸ்மார்ட் மீட்டர்களுக்கு மத்திய அரசு ஒரு மீட்டருக்கு ரூ.900 மட்டுமே வழங்கும், மீதமுள்ள தொகையை மின் வாரியம் ஏற்றுக்கொள்ளும்.
சந்தை நிலவரப்படி ஒரு ஸ்மார்ட் மீட்டர் ரூ.6 ஆயிரமாக இருக்கும் நிலையில், டெண்டரிலேயே விலை இறுதி செய்யப்படும்.