சாதிவாரி கணக்கெடுப்பில் தெலுங்கானா காங்கிரஸ் அரசின் மாதிரியைப் பின்பற்ற வேண்டும்!! மத்திய அரசுக்கு மாணிக்கம் தாகூர் யோசனை…..

சென்னை:
“தெலங்கானா மாநில காங்கிரஸ் அரசு செய்ததுபோல், மக்கள்தொகை கணக்கெடுப்புப் படிவத்திலேயே சாதிகளின் பட்டியலை வழங்கி, அதில் அவரவர் சாதியைத் தேர்ந்தெடுக்கச் சொல்ல வேண்டும்.

அப்போதுதான் துல்லியமான, உண்மையான தரவுகள் கிடைக்கும்.” என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் யோசனை கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடு முழுவதும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகளை ஒன்றிய அரசு தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக, வீடுகளின் பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதைத் தொடர்ந்து, வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடங்கவுள்ளது.

அதற்கான படிவத்தில், ‘சாதி” என்ற கேள்விக்கு, மக்கள் குறிப்பிடும் சாதியின் பெயரை அப்படியே பதிவு செய்வது என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மக்களிடம், ‘உங்கள் சாதி என்ன?” என்று கேட்டால், பெரும்பாலும் உட்சாதி பெயர்களையே குறிப்பிடுவார்கள். அந்தப் பெயர்கள் அரசின் பட்டியலில் இருக்காது.

அவற்றை அப்படியே பதிவு செய்தால், பெரும் குழப்பங்கள் ஏற்படும். இதனால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியதன் நோக்கமே நிறைவேறாமல் போய்விடும்.

எனவே, மக்கள்தொகை கணக்கெடுப்புப் படிவத்திலேயே சாதிகளின் பட்டியலை வழங்கி, அதில் அவரவர் சாதியைத் தேர்ந்தெடுக்கச் சொல்ல வேண்டும். கடந்த 2021-ம் ஆண்டு, தெலங்கானா மாநில காங்கிரஸ் அரசு மிகச் சிறப்பாக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி முடித்தது.

அது நாடு முழுவதும் பெரும் பாராட்டைப் பெற்றது. தெலங்கானா காங்கிரஸ் அரசின் மாதிரியை ஒன்றிய அரசு பின்பற்ற வேண்டும். அப்போதுதான் துல்லியமான, உண்மையான தரவுகள் கிடைக்கும்.

துல்லியமான, உண்மையான தகவல்கள் கிடைத்தால்தான், உண் மையிலேயே சமூக மற்றும் பொருளாதார ரீதியாக ஒடுக்கப் பட்ட மக்களைக் கண்டறிந்து, அவர்களுக்கான இடஒதுக்கீட்டை வழங்க முடியும்.

அவர்களுக்கான தனித்திட்டங்களைச் செயல்படுத்த முடியும். அதன் வாயிலாக, சமூக நீதியை நிலைநாட்ட முடியும்.

எனவே, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை பெயரளவுக்கு நடத்தாமல், அறிவியல் ரீதியாகவும், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியும் மிகச் சிறப்பாக நடத்த வேண்டும்.

இதற்கு தெலுங்கானா காங்கிரஸ் அரசின் மாதிரியைப் பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு நான் கடிதம் எழுதியிருக்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *