கரோனா; பொது இடங்களுக்கு செல்லும்போது கர்ப்பிணிகள், முதியவர்கள், இணை நோய் உள்ளவர்கள் முக கவசம் அணிய வேண்டும் – சுகாதார துறை அமைச்சர் அறிவுறுத்தல்!!

சென்னை:
கரோனா பாதிப்புகள் குறித்து பெரிய அளவில் அச்சப்பட தேவையில்லை. எனினும், பொது இடங்களுக்கு செல்லும்போது கர்ப்பிணிகள், முதியவர்கள், இணை நோய் உள்ளவர்கள் முக கவசம் அணிய வேண்டும் என்று சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் நீடித்த நுரையீரல் அடைப்பு நோய் மற்றும் கொழுப்புமிகு கல்லீரல் நோய் விழிப்புணர்வு பயிற்சி முகாமை சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

கரோனா பரவலுக்கு பிறகு, இதய பாதிப்புகள், நுரையீரல் பாதிப்புகள் அதிகரித்துள்ளன. இந்தியாவில் நீடித்த நுரையீரல் அடைப்பு நோயால் உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுகிறது. நீண்ட காலமாக புகை பிடிப்பது, காற்று மாசு, தொழில்சார் நோய் பாதிப்புகள் போன்றவைதான் இதற்கு முக்கிய காரணமாக உள்ளன.

அதேபோல, கொழுப்புமிகு கல்லீரல் நோய் என்பதும் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்துகிறது. நமது வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் உலகம் முழுவதும் சுமார் 30 சதவீத மக்கள் இந்த நோய் பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர்.

மேற்கண்ட 2 நோய்கள் குறித்து கள பணியாளர்கள் மூலம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம், பாதம் பாதுகாப்போம் போன்ற பல்வேறு திட்டங்களின் தொடர்ச்சியாக ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ என்ற திட்டத்தை முதல்வர் விரைவில் சென்னையில் தொடங்கி வைக்க உள்ளார். கரோனா பாதிப்புகள் குறித்து பெரிய அளவில் அச்சப்பட தேவையில்லை.

தமிழகத்தில் 216 பேர் கண்காணிப்பில் உள்ளனர். 3 நாட்களில் சளி, இருமல், தொண்டை வலி, காய்ச்சல் பாதிப்புகள் குணமடைகின்றன. இதுபோல பாதிப்புகளுக்கு உள்ளானவர்களை அந்தந்த மாவட்ட சுகாதார அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர்.

நோய் பாதிப்பு உள்ளவர்கள் பொது இடங்களில் இருமினாலோ, தும்மினாலோ அவர்களது எச்சில் துகள் காற்றில் பரவக்கூடும். இதன்மூலமாக, எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், முதியவர்கள், இணை நோய் பாதிப்பு உள்ளவர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

எனவே, மத்திய சுகாதார துறை அறிவுறுத்தலின்படி, பொது இடங்களுக்கு செல்லும் கர்ப்பிணிகள், முதியவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், இணைநோய் பாதிப்பு உள்ளவர்கள் முக கவசம் அணிய வேண்டும்.

தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது, அடிக்கடி சோப் போட்டு கைகளை கழுவுவது நல்லது. இணை நோய் உள்ளவர்கள் உயிரிழக்கும்போது, கரோனா தொற்று கண்டறியப்பட்டால், அது கரோனா இறப்பாக கருதப்படாது. இவ்வாறு அவர் கூறினார்.

சுகாதார துறை செயலர் ப.செந்தில்குமார், தேசிய நல வாழ்வு குழும இயக்குநர் அருண் தம்புராஜ், பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் செல்வவிநாயகம், மருத்துவம், ஊரக நல பணிகள் இயக்குநர் ராஜமூர்த்தி, இணை இயக்குநர் (தொற்றா நோய்) கிருஷ்ணராஜ், திட்ட அலுவலர் (தொற்றா நோய்) பிரவீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *