தமிழக அரசு கும்பகர்ணனைப் போல் தூங்காமல் விழிப்போடு இருந்து விவசாயிகள் சம்பா சாகுபடி செய்யத் தேவையான நீரை கர்நாடகத்தில் இருந்து பெற வேண்டும்!! எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்…

தஞ்சாவூர்:
“தமிழக அரசு கும்பகர்ணனைப் போல் தூங்காமல் விழிப்போடு இருந்து விவசாயிகள் சம்பா சாகுபடி செய்யத் தேவையான நீரை கர்நாடகத்தில் இருந்து பெற வேண்டும்,” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

தஞ்சாவூரில் அதிமுக சார்பில் பொதுச் செயலாளர் கே.பழனிசாமி தலைமையில் இன்று காலை, தவெக அரசின் தேர்தல் வாக்குறுதிபடி முழுமையான பயிர்க் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், குறுவை சாகுபடி செய்து, தண்ணீர் இல்லாமல் நெற்பயிர் கருகி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும், கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டுவதை தமிழக அரசு தடுக்கத் தவறியதை கண்டித்தும், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய பழனிசாமி, “தமிழகத்தின் நெற்களஞ்சி யமான, பொன் விளையும் பூமியான தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் தண்ணீர் இல்லாமல், வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. காரணம், வழக்கமான ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.

ஆனால். இந்த ஆண்டு ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படவில்லை. புதிதாக ஆட்சிக்கு வந்த தவெக அரசு, தண்ணீரை கர்நாடகத்திட மிருந்து பெற்று விவசாயிகளுக்கு வழங்க ஆர்வம் காட்டவில்லை.

இந்த அரசு ரீல்ஸ் மோகத்தில் மூழ்கியுள்ளது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி மாதந்தோறும் கர்நாடக அரசு வழங்க வேண்டிய தண்ணீரை, தமிழக அரசு கேட்டுப் பெறவில்லை, இதனால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் டெல்டாவில் 5.5 லட்சம் ஏக்கர் பரப்பளவில், நிலத்தடி நீர் மட்டத்தை நம்பி 2 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்தனர்.

அதற்கும் மும்முனை மின்சாரம் போதிய அளவு வழங்காத காரணத்தால் சுமார் 1 லட்சம் ஏக்கரில் நெற்பயிர் பாதிக்கப்பட்டு கருகிவிட்டது.

எனவே, பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணத்தை தமிழக அரசு வழங்க வேண்டும்.

அதிமுக ஆட்சிக் காலத்தில் விவசாயிகளின் நன்மையைக் கருதி ரூ.12,110 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.

ஒரே குடும்பத்தில் மூன்று பேர் கடன் பெற்றிருந்தாலும் அனைவருக்கும் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் தற்போதைய நடை முறையில், குறைந்த கடன் தொகை பெற்ற ஒருவருக்கு மட்டுமே தள்ளுபடி கிடைக்கும் நிலை உள்ளது.

தேர்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதியின்படி சிறு, குறு விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாகவும், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளின் பயிர்க்கடனில் 50 சதவீதத் தையாவது உடனடியாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். காவிரி நீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி ஆண்டுதோறும் 177.25 டிஎம்சி நீரை கர்நாடகம் வழங்க வேண்டும்.

தமிழக அரசு உடனடியாக அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டி, விவசாயிகள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து தமிழக த்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டும். கர்நாடகா அரசு மேகேதாட்டு அணைக் கட்டுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டெல்டாவில் இருக்கிற விவசாயிகள் சம்பா சாகுபடி செய்ய ஏதுவாக, தமிழக அரசு விரைவாக, வேகமாக, துரிதமாகச் செயல்பட்டு, கும்பகர்ணனைப் போல் தூங்காமல், தவெக அரசு விழிப்போடு இருந்து, விவசாயிகளுக்கு சம்பா சாகுபடி செய்யத் தேவையான நீரை கர்நாடகத்தில் இருந்து பெற வேண்டும்.

மேலும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் 10 லட்சம் நெல் மூட்டைகளை உடனடியாகக் கிடங்குகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

வறட்சி நிலவும் இக்காலத்தில் ஏரி, குளங்களில் வண்டல் மண் அள்ள விவசாயிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும்” என்று எடப்பாடி பழனிசாமி ஆர்ப்பாடத்தில் வலியுறுத்தினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *