லீட்ஸ்:
இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஹெட்டிங்லியில் உள்ள லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 48.1 ஓவர்களில் 171 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அதிகபட்சமாக அப்துல்லா ஷபிக் 61, இமாம் உல் ஹக் 42, கேப்டன் சல்மான் ஆகா 21, குர்ரம் ஷாசாத் 14, முகமது ரிஸ்வான் 12 ரன்கள் சேர்த்தனர்.
இங்கிலாந்து அணி தரப்பில் ஆலி ராபின்சன், ஜோஷ் டங்க் ஆகியோர் தலா 5 விக்கெட்களை வீழ்த்தினர். இதையடுத்து பேட் செய்த இங்கிலாந்து முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 25 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்தது.
தொடக்க வீரர்களான பென் டக்கெட் 15 ரன்களில் முகமது அப்பாஸ் பந்திலும், எமிலியோ கே 33 ரன்களில் முகமது அலி பந்திலும் ஆட்டமிழந்தனர்.
ஜோர்டான் காக்ஸ் 23, கேப்டன் ஜோ ரூட் 37 ரன்களுடன் களத்தில் இருந்தனர். நேற்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. மழை காரணமாக மதிய உணவு இடைவேளைக்கு பின்னரே ஆட்டம் தொடங்கப்பட்டது. ஜோர்டான் காக்ஸ், ஜோ ரூட் ஆகியோர் சிறப்பாக விளையாடி அரை சதம் கடந்தனர்.
இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 39.4 ஓவர் களில் 171 ரன்களை கடந்து முன்னிலை பெறத் தொடங்கியது. மட்டையை சுழற்றிய ஜோர்டான் காக்ஸ் 100 பந்துகளில், 14 பவுண்டரிகளுடன் 73 ரன்கள் எடுத்த நிலையில் அலி உஸ்மான் பந்தில் ஆட்டமிழந்தார்.
45 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்கள் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்திருந்தது. ஜோ ரூட் 62 ரன்களும், ஹாரி புரூக் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.