காத்மாண்டு:
நேபாளத்தில் பெருவெள்ளத்தால் ஏற்பட்ட இடிபாடுகளுக்குள் சிக்கிய 6 வயது சிறுமி 3 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டாள்.
நேபாளத்தில் கடந்த 26-ம் தேதி காலை பனிமலை உடைந்து ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ரசுவா மாவட்டத்தில் உள்ள திமுரே கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதக் காவல் படையைச் சேர்ந்த அதிகாரிகள் மண்ணுக்கு அடியில் இருந்து மெல்லிய அழுகுரலைக் கேட்டனர். அவர்கள் விரைந்து செயல்பட்டுத் தோண்டத் தொடங்கினர்.
நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு, அடர்த்தியான சேறு மற்றும் இடிபாடுகளுக்கு அடியில் இருந்து ஒரு சிறுமி உயிருடன் மீட்கப்பட்டாள். 6 வயதான அந்த சிறுமி 3 நாட்களாக இடிபாடு களுக்குள் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தாள்.
சிறுமியை உயிருடன் மீட்ட மீட்பு குழுவினர் முதலுதவி சிகிச்சைக்கு பிறகு, அவளை ஹெலிகாப்டர் மூலம் காத்மாண்டுவில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவள் தற்போது சிறப்பு சிகிச்சை பெற்று வருகிறாள்.
பெருவெள்ளத்தால் ஏற்பட்ட இடிபாடுகளுக்குள் சிக்கிய 6 வயது சிறுமி 3 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் உயிர் பிழைத்தவர்களைக் கண்டுபிடிப்பதற்காக அயராது உழைத்து வரும் மீட்புக் குழுவினருக்கு ஒருவித உத்வேகத்தையும், நம்பிக்கையையும் அளித்துள்ளது.
இதனிடையே, சிறுமி மீட்கப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.