போர்கள் மற்றும் நிலையற்ற சூழலுக்கு மத்தியிலும் இந்தியா 7.8% வளர்ச்சியை எட்டியுள்ளது ; பிரதமர் நரேந்திர மோடி!!

புது டெல்லி:
போர்கள் மற்றும் நிலையற்ற சூழலுக்கு மத்தியிலும் இந்தியா 7.8% வளர்ச்சியை எட்டியுள்ளது என்று பெருமிதம் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, மக்களின் கூட்டு முயற்சியாலும் உறுதியாலுமே இது சாத்தியமானது என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோவில், “7.8 சதவீத ஜிடிபி வளர்ச்சியை எட்டியதற்காக நாட்டின் மக்களுக்கு நான் வாழ்த்துத் தெரிவிக்க விரும்புகிறேன்.

மக்களின் கூட்டு முயற்சியாலும் உறுதியாலுமே இது சாத்தியமானது. எங்கும் மோதல்கள், போர்கள் மற்றும் நிலையற்ற சூழல் நிலவிய போதிலும் இந்தியா இந்த மைல்கல்லை எட்டியுள்ளது.

எல்லா திசைகளிலிருந்தும் போர்ச் செய்திகள் வருகின்றன, உலகம் நெருக்கடிகளால் சூழப்பட்டுள்ளது. விநியோகச் சங்கிலிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

2020-ல் கோவிட் காலம் தொடங்கியதிலிருந்து, எங்கும் நிலையான சூழல் இல்லை. இருப்பினும், இந்தியா தொடர்ந்து வேகமாக முன்னேறி வருகிறது.

அதேவேளையில், நாட்டிற்குள்ளேயே சிலர் அவநம்பிக்கை என்னும் ஆழமான பள்ளத்தில் மூழ்கி, பொய்களைப் பேசி, நம்பிக்கையின்மையைப் பரப்புகிறார்கள்.

இவை அனைத்தையும் கடந்து, தடைகளைத் தகர்த்து, நாடு 7.8% வளர்ச்சி விகிதத்தை எட்டியுள்ளது. நாம் இந்த வேகத்தைத் தக்கவைக்க வேண்டும். நாம் தொடர்ந்து முன்னேற வேண்டும்; அதற்கு நாம் சுயசார்பு இந்தியா ஆவது அவசியம்.

சுதேசி மற்றும் உள்ளூர் பொருட்களுக்கு முன்னுரிமை ஆகிய மந்திரங்களைப் பின்பற்ற வேண்டும்.

சுற்றுலாவுக்காக வெளிநாடுகளுக்குச் செல்வதையோ, வெளிநாடுகளில் திருமணங்களை நடத்துவதையோ தவிர்க்க வேண்டும்.

‘இந்தியாவில் திருமணம்’ என்ற மந்திரத்தை நடைமுறைப் படுத்த வேண்டும். அதேபோல், அவசியமென்றால் ஒழிய தங்கம் வாங்குவதையும் தவிர்க்க வேண்டும்.

சுதேசி மற்றும் சுயசார்பு ஆகியவற்றை நாம் எவ்வளவு அதிக மாக வலியுறுத்துகிறோமோ, அந்தளவுக்கு சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் நேரத்தில் நமது இளைஞர்களிடம் ஒரு ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை’ ஒப்படைப்போம் என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது.

இன்றைய நமது கடின உழைப்பின் மூலம், இளம் தலைமுறையினரின் கனவுகளை நாம் நிச்சயமாக நனவாக்குவோம்.

நமது முயற்சிகளில் எவ்விதக் குறைவும் இருக்கக்கூடாது. நமது கொள்கைகள் உறுதியானவை, நோக்கங்கள் தூய்மை யானவை. 140 கோடி இந்தியர்களின் கூட்டு வலிமை நாட்டை புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்ல ஒன்றிணைகிறது.

உறுதியான முடிவை எடுப்போம், அந்த முடிவை நனவாக்க ஒன்றிணைந்து முன்னேறுவோம்.” என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *