விஞ்ஞான ரீதியான ஊழலுக்கு பெயர் போனது திமுக.; எப்படி அனைத்து ஆறுகளும் கடலில் சென்று சேருகிறதோ, அதேபோல தமிழ்நாட்டின் ஊழல் பணமெல்லாம் ஒரு குடும்பத்தை சென்று சேருகிறது – திருச்சியில் பிரதமர் மோடி கடும் தாக்கு!!

திருச்சி
‘‘விஞ்ஞான ரீதியான ஊழலுக்கு பெயர் போனது திமுக. எப்படி அனைத்து ஆறுகளும் கடலில் சென்று சேருகிறதோ, அதேபோல தமிழ்நாட்டின் ஊழல் பணமெல்லாம் ஒரு குடும்பத்தை சென்று சேருகிறது.

அதன் குடும்பச் சொத்தாக ஆகிறது’’ என்று திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி கடுமையாக தாக்கிப் பேசினார்.

திருச்சியில் நேற்று மாலை நடைபெற்ற தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி பேசியதாவது:

தமிழகத்தில் நான் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளேன்; காசி தமிழ் சங்கத்திலும் பங்கேற்றுள்ளேன்.

ஆகையால், தமிழ் மக்களின், தமிழகத்தின் நாடித் துடிப்பை என்னால் தெளிவா கக் கணக்கிட முடிகிறது. ​ஆடி மாதத்தில் காவிரி நதி தீவிர சக்தியோடு பயணிக்கின்றாள்.

அதேபோல தமிழ்நாட்டின் இந்த தேர்தல் காலத்திலும் கூட மாற்றத்துக்கான ஆசை பெரும் வேகத்தை நோக்கி பயணிக்கின்றது. ஆட்சி அதிகாரத்திலிருந்து திமுகவை தூக்கி எறிய மொத்த மாநிலமும் தீர்மானித்துவிட்டது.

ஒரு குடும்பத்துக்காக மட்டுமல்ல, மாநிலத்தின் அனைத்து குடும்பங்களுக்காகவும் செயல்படும் அரசையே மக்கள் விரும்புகிறார்கள்.

தமிழ்நாட்டிலே என்டிஏ கூட்டணியால் மட்டுமே மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என மக்கள் நன்கு அறிந்துள்ளனர்.

மதுரை விமான நிலையத்தைச் சர்வதேச நிலைக்கு உயர்த்தியிருக்கிறது மத்திய அரசு. ​இதன் காரணமாகப் பல முக்கியமான உலக நகரங்களிலிருந்து மதுரைக்கும், மதுரையிலிருந்து அந்த நகரங்களுக்கும் நேரடி விமானப் போக்குவரத்து உருவாகும். ஆயிரக்கணக்கான பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும், வணிகர்களும் மதுரைக்கு எளிதாக சென்று வருவார்கள்.

இதன் விளைவாக விவசாயிகள் மற்றும் வர்த்தகர்கள் தங்கள் பொருட்களைத் உலகம் முழுவதும் கொண்டு சேர்க்க முடியும். விவசாயிகளால் காலையில் பறிக்கப்படுகின்ற ‘மதுரை மல்லி’, பாரிஸ் நகர், நியூயார்க் நகரின் கடைகளுக்கு அன்று மாலைக்குள் கொண்டு சேர்க்கப்படும்.

2021-ம் ஆண்டில் தமிழக மக்கள் திமுகவை ஆட்சியில் அமர வைத்தார்கள். ஆனால், திமுக அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பை, கடமையை நிறைவேற்றாமல், மக்களுக்கு துரோகம் இழைத்தார்கள். திமுக ஆட்சியில் அனைத்தும் ஒரு குடும்பத்திலிருந்து தொடங்கி ஒரே குடும்பத்திலேயே முடிந்து போய்விடுகிறது.

அமைச்சர்கள் மாறலாம், எம்எல்ஏக்கள் மாறலாம், ஆனால் அதிகாரம் ஒரே ஒரு குடும்பத்திடம் மட்டுமே இருக்கும். விஞ்ஞான ரீதியான ஊழலுக்கு பெயர் போனது திமுக. இன்றைக்கு இந்த மாடல்தான், ஒரே ஒரு குடும்பத்தின் ஏடிஎம் ஆகத் தமிழ்நாட்டை மாற்றியிருக்கிறது.

நேரு மீது குற்றச்சாட்டு: திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு அமைச்சர் (கே.என்.நேரு) வேலை வாங்கித் தருவதாகச் கூறி பணம் பெற்றுப் பெரிய மோசடியில் சிக்கியிருக்கிறார்.​

வேலைகள் பணத்துக்காக விற்கப்படும்போது நேர்மையான, இளைஞர்களின் கனவுகள் நாசமாகிப் போகிறது. இந்த பணமெல்லாம் எங்கே போகிறது.

எப்படி அனைத்து ஆறுகளும் கடலில் சென்று சேருகிறதோ, அதேபோல தமிழ்நாட்டின் ஊழல் பணமெல்லாம் ஒரு குடும்பத்தை சென்று சேருகிறது. அதன் குடும்பச் சொத்தாக ஆகிறது.

தமிழகத்தின் உணவுப் பாதுகாப்புக்கு டெல்டா பகுதி விவசாயிகள் தான் முதுகெலும்பாக இருக்கின்றார்கள். தானிய சேமிப்பு கிடங்குகளை உருவாக்குவோம் என்பதே திமுகவின் வாக்குறுதியாக இருந்தது. ​

ஆனால் இன்றைக்கு, விவசாயிகள் எல்லாம் இந்த சேமிப்பு கிடங்குகள் எங்கே என்று தேடிக்கொண்டிருக்கின்றார்கள். ​திமுகவை பொருத்தமட்டிலே அரசியல் என்பது மக்கள் நலனை விட முதன்மையானது.

ஊரகப் பகுதி ஏழைகளுக்கான வீடுகள் கட்டி தரும் திட்டத்தை தாமதப்படுத்தி இருக்கின்றார்கள். மக்கள் மத்திய அரசை பாராட்டி விடுவார்களே என்ற பயம் தான் இதற்கு காரணம். ​

திமுக அரசில் பெண்களுக்கு எதிரான வன்முறை குற்றங்கள் வாடிக்கையாகிவிட்டன. அண்மையிலே ஒரு சிறுமியைக் கூட விட்டு வைக்காத ஒரு திமுக உறுப்பினர், அவர் பற்றிய மோசமான செய்தியை நாம் அனைவருமே பார்த்தோம்.

நான் உங்களிடத்திலே வாக்களிக்கின்றேன். தமிழகத்தின் பெண்கள் அச்சமில்லாமல் பயமில்லாமல் வாழ்வதை தேஜ கூட்டணி உறுதி செய்யும்.

தமிழக வரலாற்றிலே வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தல் என்பது மிகவும் முக்கியமானது. மக்கள் முன்பாக இருக்கும் தேர்வு தெளிவாக இருக்கிறது. ஊழல், வாரிசு அரசியல், பொய்யான வாக்குறுதிகளை நோக்கி ஒரு பாதை. ​

அனைவரும் இணைந்து வளமான தமிழகத்தை உருவாக்குவோம். அனைவரும் இணைந்து வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவோம். ​இங்குள்ளவர்களின் குரல் மாநிலம் எங்கும் எதிரொலிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

வதந்திகளை நம்பாதீர்கள்: தமிழகத்தின் மக்களிடத்திலே மேற்கு ஆசியாவில் நடக்கும் போர் பற்றி பேச விரும்புகிறேன்.

இது உலகின் ஒட்டுமொத்த எரிசக்தி வழங்கல் சங்கிலிகளை பாதித்திருக்கின்றது. நீங்கள் யாரும் பயப்பட தேவையில்லை. பீதி அடைய தேவையில்லை.

வதந்திகளை நம்பாதீர்கள். ​கரோனா காலத்திலே எப்படிப்பட்ட முதிர்ச்சியை தேசம் பெற்றது என்பதை 140 கோடி இந்தியர்கள் உலகுக்கு எடுத்துக்காட்டினார்கள். ஒரு தேசம் என்ற வகையிலே ஒவ்வொரு சூழ்நிலையையும் வெற்றிகரமாக கடந்து செல்வோம் என்பதை நான் உறுதிப்படுத்துகிறேன்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *