ஆவடியில் அனைத்து வீடுகளுக்கும் 24 மணி நேரமும் குடிநீர்; முதல்வர் விஜய்!!

சென்னை: 

தமிழகத்தின் நகரங்களில் குடிநீர், பாதாளச் சாக்கடை, திடக்கழிவு மேலாண்மை, பசுமைப் பரப்பு மற்றும் சாலை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் பல்வேறு புதிய திட்டங்களை சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், “தமிழகத்தின் நகரங்களில் குடிநீர், பாதாளச் சாக்கடை, திடக்கழிவு மேலாண்மை, சாலைகள், பூங்காக்கள் மற்றும் பள்ளி வசதிகளை மேம்படுத்தும் வகையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

வேகமாக அதிகரித்துவரும் நகரமயமாக்கல் மற்றும் மக்கள் தொகைப் பெருக்கத்தால், நகரங்களில் குடிநீர், கழிவுநீர், திடக்கழிவு மேலாண்மை, போக்குவரத்து, பசுமை மற்றும் அடிப்படை உட்கட்டமைப்பு தொடர்பான தேவைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

எதிர்காலத் தேவைகளைக் கருத்தில்கொண்டு, நகரங்களை சுகாதாரமான, பாதுகாப்பான, பசுமையான மற்றும் மக்கள் வாழ்வதற்கு ஏற்ற நகரங்களாக மாற்றுவது இன்றைய அவசியமாகும். இதனை முன்னிட்டு, பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்துவது அரசின் முக்கியக் கடமையாகும்.

1. பாதுகாப்பான மற்றும் தடையற்ற குடிநீர் விநியோகத் திட்டங்கள்: மக்களுக்குத் தேவையான குடிநீரைத் தடையின்றி வழங்கும் வகையில் பல்வேறு குடிநீர்த் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

வடசென்னை, ஆவடி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பகுதிகளின் குடிநீர்த் தேவையைப் பூர்த்திசெய்யும் வகையில், மீஞ்சூரில் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் (Desalination Plant) 4 ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

ஆவடி மாநகராட்சியில் அனைத்து வீடுகளுக்கும் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் வகையில் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

மதுரை, கடலூர் மாநகராட்சிகள், 9 நகராட்சிகள் மற்றும் 20 பேரூராட்சிகளில் குடிநீர் வசதிகளை மேம்படுத்த ஆயிரம் கோடி ரூபாயும், பழமையான 33 கூட்டுக்குடிநீர்த் திட்டங்களைச் சீரமைக்க முதற்கட்டமாக 300 கோடி ரூபாயும் ஒதுக்கப்படும்.

சென்னை கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் திறனை அதிகரிக்க 410 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்படும்.

2. நவீன பாதாளச் சாக்கடை மற்றும் கழிவுநீர் மேலாண்மை: மதுரை மாநகராட்சியில் 40 ஆண்டுகள் பழமையான பாதாளச் சாக்கடை அமைப்பைச் சீரமைக்க முதற்கட்டமாக 2 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடப்பாண்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

நாகர்கோவில் மாநகராட்சியில் விடுபட்ட மற்றும் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளிலும், குன்றத்தூர் மற்றும் நந்திவரம்–கூடுவாஞ்சேரி நகராட்சிகளிலும் 960 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பாதாளச் சாக்கடைத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

மேலும், சென்னை – பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் மற்றும் கழிவுநீர் அமைப்புகளை மேம்படுத்த 236 கோடி ரூபாய் செலவிடப்படும்.

3. அறிவியல் பூர்வமான திடக்கழிவு மேலாண்மை மற்றும் மின் உற்பத்தி:

திருநெல்வேலி மாநகராட்சியில் 256 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 9 மெகாவாட் திறன் உற்பத்தி செய்யும் வகையிலும், சேலம் மாநகராட்சியில் 291 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 10 மெகாவாட் திறன் உற்பத்தி செய்யும் வகையிலும் ‘திடக்கழிவிலிருந்து எரிசக்தி உற்பத்தி செய்யும் திட்டங்கள்’ (Waste to Energy Projects) செயல்படுத்தப்படும். இத்திட்டங்கள் மொத்தம் 547 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

4. மேம்படுத்தப்பட்ட நகர்ப்புர சாலைகள் மற்றும் போக்குவரத்துக் கட்டமைப்பு:

குடிநீர் மற்றும் பாதாளச் சாக்கடைப் பணிகளுக்காகத் தோண்டப்பட்டு சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்கவும், புதிய சாலைகள் அமைக்கவும் சென்னை உட்பட அனைத்து நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளிலும் 1,850 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

‘வெற்றித் தமிழகம்’ தொலைநோக்குத் திட்டத்தின்படி, சென்னை மாநகராட்சியில் 45 சதுர கிலோ மீட்டர் பரப் பளவில் 35 கிலோ மீட்டர் நீளத்திற்கு மக்கள் பயன்பாட் டிற்கு ஏற்ற நவீன சாலைகள் மற்றும் நடைபாதைகள் (People Friendly Modern Streets), பள்ளிகளைச் சுற்றி 15 கிலோ மீட்டர் நீளத்திற்குக் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் சாலை வசதிகள் (Safe Access to Schools) மற்றும் 105 சாலை சந்திப்புகளை மேம்படுத்தும் பணிகள் 110 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

பிற மாநகராட்சிகளிலும் இதேபோன்ற நவீன சாலைகள் மற்றும் நடைபாதைகள், பள்ளிகளைச் சுற்றியுள்ள பாதுகாப்பான சாலை வசதிகள் மற்றும் சாலை சந்திப்பு மேம்பாட்டுப் பணிகள் 165 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

இப்பணிகள் அனைத்தும் 275 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த நகர்ப்புர மேம்பாட்டுத் திட்டமாகச் செயல்படுத்தப்படும்.

5. நகர்ப்புர பசுமையாக்கல் மற்றும் பொழுதுபோக்குப் பூங்காக்கள்: சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், நகரங்களில் பசுமைப் பரப்பை அதிகரிக்கவும், பொதுமக்களுக்கான பொழுதுபோக்கு வசதிகளை மேம்படுத்தவும் பல்வேறு பசுமைத் திட்டங்கள் செயல்படுத்தப்படும். மக்கள் இயக்கமாக ஒரு கோடி மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படும்.

திருச்சி, திருப்பூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பெரிய பூங்காக்கள் 130 கோடி ரூபாய் செலவிலும், மாநிலம் முழுவதும் 250 புதிய பூங்காக்கள் 175 கோடி ரூபாய் செலவிலும் என மொத்தம் 305 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

6. பள்ளிகளின் உள்கட்டமைப்பு மேம்பாடு: நகர்ப்புர உள்ளாட்சிகளின் பள்ளிகளில் தரமான கல்வி மற்றும் பாதுகாப்பான சூழலை வழங்கும் வகையில், புதிய வகுப்பறைகள் கட்டுதல் மற்றும் நவீன வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்புப் பணிகள் மொத்தம் 335 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.

7. பாரம்பரிய நகரங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களின் சீரமைப்பு: சிதம்பரம் நகராட்சியில் நடைபெறும் உலகப் புகழ்பெற்ற அருள்மிகு தில்லை நடராஜர் திருத்தேர் விழாவைச் சிறப்பாக நடத்தவும், பக்தர்கள் எவ்வித இடையூறுமின்றி தரிசனம் செய்யவும், கோயிலைச் சுற்றியுள்ள நான்கு ரத வீதிகளில் குடிநீர், பாதாளச் சாக்கடை, மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு கம்பிகளைத் தரைக்கு அடியில் கொண்டு சென்று வீதிகளை நவீன முறையில் சீரமைக்க 36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

கடலூரில் புனித டேவிட் கோட்டை முதல் வெள்ளி கடற்கரை வரை 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாரம்பரிய நடைபாதை அமைக்கப்படும். கன்னியாகுமரி கடற்கரைப் பகுதியை அழகுபடுத்தி, சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த 50 கோடி ரூபாய் செலவிடப்படும்.

8. சமச்சீர் வளர்ச்சி மற்றும் அடிப்படை வசதிகள் மேம்பாடு: சென்னை மாநகராட்சியின் உட்கட்டமைப்பு வசதி குறைவாக உள்ள பகுதிகளில் சாலைகள், மழைநீர் வடிகால்கள், தெருவிளக்குகள், நடைபாதைகள், திடக்கழிவு மேலாண்மை வசதிகள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் சமுதாய நலக்கூடங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த 100 கோடி ரூபாய் செலவிடப்படும்.

இவ்வாறு முதல்வர் விஜய் அறிவித்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *