மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் தொடர் சர்ச்சை யில் சிக்கி வருகிறது – கோயில் நிர்வாகம்!!

மதுரை:
அழைப்பிதழ்களில் பெயர் அச்சடுவது, ஆய்வுக் கூட்டங்க ளுக்கு அதிகாரிகள் முதல் மக்கள் பிரதிநிதிகளை அழைப்பது வரை மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் கோயில் நிர்வாகம் தொடர் சர்ச்சையில் சிக்கி வருகிறது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா 17 ஆண்டுகளுக்குப் பின்பு வரும் செப்.17-ம் தேதி காலை நடைபெறுகிறது.

கடந்த திமுக ஆட்சியிலேயே குடமுழுக்கு விழா திருப்பணிகளை அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன் தலைமையில் கோயில் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

இதில் 2018 பிப்.2-ல் நடந்த தீ விபத்தில் சேதமடைந்த வீரவசந்தராயர் மண்டபத்தைச் சீரமைக்கும் பணிகளும் நடந்தன.

ஆனால், வீரவசந்தராயர் மண்டபப் பணிகள் நிறைவு பெறாததால் அப்பணியை மட்டும் தவிர்த்து குடமுழுக்கு விழா நடத்த திமுக ஆட்சியில் ஏற்பாடானது. பின்னர் ஆகம விதிப்படி வீரவசந்தராயர் மண்டபப் பணிகளை முடித்துவிட்டு செப்.17-ல் குடமுழுக்கு நடத்த முடிவானது.

இந்நிலையில் 2026 ஜனவரியில் திமுக ஆட்சியில் அறங்காவலர்களின் பதவிகள் 2 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டன. அதன் பின்னர் சட்டப்பேரவைத் தேர்தலால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தவெக அரசு அமைந்தது.

இருப்பினும், திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட அறங்காவலர்களே திருப்பணி களை மேற்கொண்டனர். ஆனால், கோயில் நிர்வாகம் சார்பில் அச்சடிக்கப்பட்ட அழைப் பிதழில் அறங்காவலர் குழுத் தலைவர், அறங்காவலர்கள் பெயர்கள் இடம் பெறவில்லை.

மேலும், அமைச்சர் தலைமையில் கடந்த வாரம் நடந்த மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு விழா ஆலோசனைக் கூட்டத்துக்கும் அழைக்கப்படாமல் அறங்காவலர்கள் புறக்கணிக்கப்பட்டனர்.

தவெக எம்எல்ஏ-க்கள், மாவட்ட நிர்வாக உயர் அதிகாரிகளுக்குக்கூட கோயில் நிர்வாகம் சார்பில் இந்த கூட்டத்துக்கான அழைப்புகள் செல்லவில்லை என்று கூறப்படுகிறது.

தவெக-வை சேர்ந்த 2 எம்எல்ஏ-கள் தவிர பிற எம்எல்ஏ-க்கள் முறையான அழைப்பு இல்லாததால் அவர்கள் பங்கேற்கவில்லை.

குடமுழுக்கு விழா ஏற்பாடுகளில் கோயில் நிர்வாகம் திட்டமிட்டோ, கவனக் குறைவாகவோ, அலட்சியமாகவோ சொதப்பி தொடர் சர்ச்சையில் சிக்கி வருகிறது.

குடமுழுக்கு விழா அழைப்பிதழில் அறங்காவலர்கள் பெயர் அச்சிடப்படாதது உயர் நீதிமன்றத்தில் வழக்காகி யுள்ளது.

மேலும், குடமுழுக்கு விழா மட்டுமி்ல்லாது அன்றாட முக்கிய நிகழ்வுகளைக்கூட கோயி்ல் நிர்வாகத் தரப்பில் இருந்து செய்தி அறிக்கைகள் வழங்கப்படுவதில்லை.

அவர்கள், சமூக வலைதளங்களில் பார்த்து பொதுமக்கள் தெரிந்து கொள்ளட்டும் என்று பத்திரிகைகளுக்கு வழங்கு வதில்லை.

இதுதொடர்பாக, மாவட்ட நிர்வாகத் தரப்பில், கோயில் நிர்வாகத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றும் அவர்கள் அவற்றை அலட்சியப்படுத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது: குடமுழுக்கு விழா திருப்பணிகள் முழுமை பெறவில்லை. அம்மன் சந்நிதி எதிரிலுள்ள ஊஞ்சல் மண்டபம், பக்கத்திலுள்ள செவ்வந்தீஸ்வரர் சந்நிதி ஆகியவற்றில் திருப்பணிகள் நடைபெறவில்லை.

வீரவசந்தராயர் மண்டபத்தில் கோபுரக் கலசம் அமைக்கும் பணி தாமதமாகவே நடந்து வருகிறது.

கோயில் நிர்வாகத்தின் கவனம் முழுவதும் தற்போது விழா ஏற்பாடுகளில் இல்லாமல் விழா ஏற்பாடுகளில் யார் யாருக்கு முக்கியத்துவம் கொடுப்பது, யாரைப் புறக்கணிப்பது என்று திசை மாறுவதால் திருப்பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

கோயில் தொடர்பான தகவல்களை தற்போது சமூக வலைதளங்களில் மட்டுமே பார்க்க முடிகிறது. கோயில் நிர்வாகம் சார்பில் முறையான அறிவிப்புகள் வெளிவரு வதில்லை, தாக்கத்தை ஏற்படுத்துவோர் (இன்புளூயன்சர்கள்) மூலம் கோயில் தகவல்களை வெளியிடுகின்றனர், ’’ என்றனர்.

கோயில் நிர்வாகம் தரப்பில் கூறுகையில்,‘‘கோயில் திருப்பணிகள் முறையாக நடந்து வருகின்றன. சுவாமி, அம்மன் சந்நிதி விமானங்கள் மற்றும் கோபுரங்கள் தயார் நிலையில் உள்ளன.

ஊஞ்சல் மண்டபத்தில் பழமையான மூலிகை ஓவியங்கள் உள்ளதால் தொல்லியல் துறை அனுமதி பெற்றுத்தான் சீரமைப்புப் பணிகள் நடைபெறும்.

பெரிய பரப்புள்ள கோயிலுக்குச் சீரமைப்பு பணிகளுக்கு நிதி ஒதுக்கீடும், போதிய கால அவகாசமும் தேவை. அதன்படியே திருப்பணிகள் நடந்து வருகின்றன’’ என்றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *