மும்பை:
மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள தஹிபாலே குடும்பத்தில், நான்கு தலைமுறைகளுக்குப் பிறகு முதன்முறையாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.
சுமார் 200 ஆண்டுகளாக இந்தக் குடும்பத்தில் பெண் குழந்தை பிறக்காத நிலையில், இப்போது பிறந்த குழந்தைக்கு ‘கார்கி’ எனப் பெயரிட்டுள்ளனர்.
மருத்துவமனையில் பிரசவம் முடிந்து வீடு திரும்பிய தாய் மற்றும் குழந்தையை அவர்களுடைய குடும்பத்தினர் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றனர்.
குறிப்பாக, மேளதாளங்கள் முழங்க, கிராமிய நடனங்களுக்கு நடுவே அலங்கரிக்கப்பட்ட சாரட் வண்டியில் தாய், குழந்தையை ஏற்றி ஊர்வலமாக வீட்டுக்கு அழைத்து வந்தனர்.
குழந்தையின் தாத்தா லிம்பாஜி தஹிபாலே உணர்ச்சிவசப்பட்டு கூறும்போது, “குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை பிறப்பது பெரும் பாக்கியம். பல ஆண்டுகளாக பெண் இல்லாத குறை இருந்தது, இன்று அது நிறைவேறியுள்ளது” என்றார்.
தன்னுடைய இரு மருமகள்களையும் சொந்த மகள்களைப் போலவே நடத்தி வந்ததாகவும், பேத்தியை தேரில் இசையுடனும் நடனத்துடனும் வீட்டுக்கு அழைத்து வந்ததில் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் தெரிவித்தார்.
குழந்தையின் பாட்டி சுரேகா தஹிபாலே கூறும்போது, “இன்று எங்கள் வீட்டுக்கு லட்சுமி வந்திருக்கிறாள் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்” என்றார்.
குழந்தையின் தந்தை கூறும்போது, “பொதுவாக மக்கள் ஆண் குழந்தையையே விரும்புவார்கள், ஆனால் பெண் குழந்தை பெறும் உணர்வும் மகிழ்ச்சியும் வேறு விதமானது.
மகள்கள் தந்தையிடம் அதிக பாசம் கொண்டவர்கள். எங்கள் மகளை ஒரு மலரைப் போல வளர்ப்போம்” என்றார்.
இந்நிகழ்வைப் பாராட்டிய சமூக ஆர்வலர் அனந்த் இங்லே, சமூகத்தில் இன்னும் சில பிரிவினரிடையே பெண் குழந்தை குறித்து குறுகிய மனநிலை நிலவுகிறது. ஆனால், தஹிபாலே குடும்பம் கார்கியின் பிறப்பைக் கொண்டாடி, சமூகத்துக்கு நேர்மறையான செய்தியை அனுப்பியிருப்பதாக அவர் பாராட்டினார்.