சென்னை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில், அது தொடர்பான மாவட்ட அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகளை ஆய்வு செய்யும் விதமாக முதல்வர் விஜய் இன்று தலைமைச் செயலகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், பல்வேறு துறை அமைச்சர்கள், துறை செயலர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்துகிறார்.
இந்த ஆண்டு, அடுத்த மாதம் 3 அல்லது 4-வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர்கள், துறை செயலர்கள் மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோருடன் முதல்வர் விஜய் தலைமைத் செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஏரிகள், குளங்கள், கால்வாய்கள் மற்றும் மழைநீர் வடிகால்களில் தூர் வாருதல், ஆகாய தாமரைச் செடிகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும்போது தாழ்வான பகுதிகளை முன்கூட்டியே அடையாளம் காணுதல், அங்குள்ள மக்களை தங்க வைக்க நிவாரண முகாம்களை ஏற்பாடு செய்தல், அங்கு குடிநீர், கழிவறை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உறுதி செய்தல், சமையல் கூடங்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை இருப்பு வைத்தல், தன்னார்வலர்கள் ஒருங்கிணைப்பு,மீட்பு பணிகளுக்கான தயார் நிலை, பருவமழைக்கால நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான நடவடிக்கைகள், சிறப்பு முகாம்களை நடத்துவதற்கான தயார் நிலை, கடலோர மாவட்டங்களில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கடலோர நகரங்களில் மீட்பு நடவடிக்கையில் மீனவர்களை பயன்படுத்துவது, போதிய படகுகளை தயார் நிலையில் வைத்தல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.