ஜனநாயகத்தின் அடிப்படையை பலப்படுத்தும் புதிய குற்றவியல் சட்டங்கள் சண்டிகரில் 100% அமலுக்கு வந்துள்ளது – பிரதமர் மோடி பெருமிதம்!!

சண்டிகர்:
ஜனநாயகத்தின் அடிப்படையை பலப்படுத்தும் புதிய குற்றவியல் சட்டங்கள் சண்டிகரில் 100% அமலுக்கு வந்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதமாக தெரிவித்துள்ளார்.

நம் நாட்டில் இந்தியத் தண்டனைச் சட்டம் (ஐபிசி), இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆர்பிசி), இந்திய சாட்சி சட்டம் (ஐஇஏ) ஆகிய சட்டங்கள் அமலில் இருந்தன.

இவற்றுக்கு மாற்றாக முறையே, பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்), பாரதிய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்) மற்றும் பாரதிய சாட்சிய அதினியம் (பிஎஸ்பி) ஆகிய புதிய குற்றவியல் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டன.

இதில் இணையவழி குற்றம், திட்டமிட்ட குற்றம் உள்ளிட்ட நவீன கால சவால்களுக்கு தீர்வு காணும் வகையில் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த சட்டங்கள் கடந்த ஜூலை 1-ம் தேதி நாடு முழுவதும் அமலுக்கு வந்தது.

இந்நிலையில், நாட்டிலேயே இந்த 3 புதிய சட்டங்களையும் 100% அமல்படுத்திய நிர்வாகம் என்ற பெருமை சண்டிகருக்கு கிடைத்துள்ளது.

இதையொட்டி சண்டிகரில் நேற்று கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில், ஆதாரங்களை திரட்டுதல், வாக்குமூலங்களை சேகரிப்பது உட்பட புதிய சட்டங்கள் அமல்படுத்தப்படுவது பற்றி செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, பஞ்சாப் ஆளுநரும் சண்டிகர் நிர்வாக அதிகாரியுமான குலாப் சந்த் கட்டாரியா உள்ளிட்டோர் கண்காட்சியை பார்வையிட்டனர்.

பின்னர் இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: பழைய குற்றவியல் சட்டங்கள் பிரிட்டிஷார் ஆட்சியின்போது உருவாக்கப்பட்டவை. அவை இந்தியர்களை அடிமையாக வைத்திருப்பதையும் தண்டிப்பதையும் குறிக்கோளாகக் கொண்டிருந்தன.

ஆனால் புதிய குற்றவியல் சட்டங்கள் மக்களால், மக்களுக்காக என்ற ஜனநாயகக் கோட்பாட்டை பலப்படுத்தும் நோக்கத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வதாக இது அமைந்துள்ளது. இவை நம் நாட்டின் குடிமக்களுக்காக நமது அரசியலமைப்பு கற்பனை செய்த கொள்கைகளை நிறைவேற்றும் வகையில் அமைந்துள்ளன.

மூன்று புதிய குற்றவியல் சட்டங்களும் சண்டிகரில் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் நாட்டிலேயே 3 புதிய சட்டங்களையும் 100% அமல்படுத்திய நிர்வாகம் என்ற பெருமை சண்டிகருக்கு கிடைத்துள்ளது.

சுதந்திரத்துக்குப் பிந்தைய 70 ஆண்டுகளில், நமது நீதித்துறை எதிர்கொண்ட சவால்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன.

அனைத்து விதிகளின் நடத்தை அம்சங்களும் பகுப்பாய்வு செய்யப்பட்டு புதிய சட்டங்கள் இயற்றப்பட்டன. இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், நீதிபதிகள் மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கு நன்றி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *