மதுரை;
‘‘அரசியலில் பெரிய எதிர்காலம் வேண்டும் என நினைக்கிறவர்கள் யாரும் ஸ்டாலின், உதயநிதி, எடப்பாடியை நம்பிப் பயணிக்கமாட்டார்கள்’’ என்று அமைச்சர் நிர்மல் குமார் கூறியுள்ளார்.
மதுரையில் வரும் 28-ம் தேதி முதல்வர் வருகையை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் நிர்மல் குமார் காந்தி மியூசியத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புதுப்பிக்கப்பட்ட காந்தி மியூசியம் திறப்பு விழா, தாய்மாமன் தங்க மோதிர திட்ட தொடக்க விழா வரும் 28-ஆம் தேதி மதுரையில் நடைபெறவுள்ளது.
இந்த இரு நிகழ்வுகளிலும் பங்கேற்க முதல்வர் விஜய் வருகிறார். தாய்மாமன் தங்க மோதிரத் திட்டத்தை மதுரையிலிருந்து தொடங்கி வைப்பது அனைவருக்கும் ஒரு பெருமையான விஷயம்.
முதல்வர் இந்த இரு நிகழ்ச்சிகளில் பங்கேற்பது குறித்து மட்டுமே முதல்வர் அலுவலகத்தில் இருந்து தெரிவிக் கப்பட்டுள்ளது.
மீனாட்சியம்மன் கோயிலுக்குச் செல்வாரா என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை. முதல்வர் வருகைக்கான நேரம் உள்ளிட்டவை குறித்து முறையாக அறிவிக்கப்படும்.
திமுக ஆட்சியில் வீரமணி வழக்கு போன்று பல வழக்குகள் மூடி மறைக்கப்பட்டுள்ளன.
முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறும்போது, ‘வீடியோ தெளிவில்லாமல் இருந்தது’ என கூறியுள்ளார். திமுகவினர் இந்த வழக்கை மிகச் சாதாரணமாகக் கடந்து சென்றுள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக வீரமணியை மிரட்டி, பலரும் பணம் வாங்கியதாக செய்திகள் வருகின்றன. இது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
திமுக ஆட்சியில் போக்சோ வழக்கை கிடப்பில் போடுவதற்கான காரணம் என்ன? போதுமான ஆதாரம் இல்லை என்று கிடப்பில் போட்டீர்களா? இல்லை பேரம் முடிந்து போனதால் கிடப்பில் போட்டீர்களா என்பதுதான் எங்கள் கேள்வி.
திமுக ஆட்சியில் பழனிவேல் தியாகராஜன் நிதித்துறை அமைச்சராக இருந்தபோது, அவர் அந்தப் பதவிக்கு சரியா வரமாட்டார் என்றுதான் விலக்கி வைக்கப்பட்டார்.
இன்னும் அவர் எத்தனை நாளைக்குதான் அப்பா, தாத்தான்னு குடும்பப் பெருமைகளை பேசி அரசியல் செய்வார் என்று தெரியவில்லை.
அவரை இப்போது வரைக்கும் அறிவாலயத்துக்குள் விட வில்லை. அவரின் தகுதி பற்றி திமுகவினருக்கு தெரியும்.
அவர் சொந்த தொகுதிக்குள் போகாததால் மக்கள் அவருக்கு வாக்களிக்காமல் வெளியே அனுப்பி விட்டனர்.
தவெகவில் யாரும் பவர் சென்டர் இல்லை. மக்களுக்கு என்ன தேவையோ அதைத்தான் செய்து வருகிறோம். நாங்கள் எந்த அறங்காவலர்களையும் தொந்தரவு செய்யவில்லை.
பழனிவேல் தியாகராஜன் தனது, சொந்த அறக்கட்டளையில் உள்ளவர்களை எந்த வேலையும் செய்யவிடாமல் முடக்கியவர்.
மொத்தத்தில் அரசியலில் பெரிய எதிர்காலம் வேண்டும் என நினைக்கிறவர்கள் யாரும் ஸ்டாலின், உதயநிதி, எடப்பாடியை நம்பிப் பயணிக்கமாட்டார்கள்.
சும்மா பொழுதுபோக்குக்கு லெட்டர் பேடு வைத்துக்கொண்டு ஊர் சுற்றிவர வேண்டும் என நினைப்பவர்கள்தான் அவர்களுடன் இனி பயணிப்பார்கள்.
நாங்கள் எங்கள் கொள்கை எதிரியாக பாஜகவை நினைக்கி றோம் என்பதில் உறுதியாக உள்ளோம். கடந்த சட்டப் பேரவைத் தேர்தல்களில் திமுக, அதிமுக கட்சிகள் பெற்ற வாக்குகள், அவர்களுடைய கூட்டணிக் கட்சிகளுடைய வாக்குகள்.
இந்த தேர்தலில் அவர்கள் எவ்வளவு வாக்குகள் வாங்கு கிறார்கள் என்று பார்ப்போம், ’’ என்றார்.