மதுரை:
மதுரையில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த முதல்வர் விஜய், விமான நிலையம் முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடக்க விழா நடந்த அரசு மருத்துவமனை, காந்தி அரசு அருங்காட்சியகம், மீனாட்சியம்மன் கோயில் என மொத்தம் 44 கிலோ மீட்டர் தொலைவுக்கு நகர் பகுதியில் ‘ரோடு ஷோ’ சென்றார்.
மதுரையில் இதுவரை எந்த தலைவரும் இதுபோல், வழிநெடுக மக்களை சந்திக்க ‘ரோடு ஷோ’ செல்லவில்லை.
மதுரை விமான நிலையத்தில் இருந்து சுற்றுச்சாலை வழியாக மதுரை நோக்கி காரில் வந்த முதல்வருக்கு பெருங்குடி அருகே கள்ளழகர் தங்க குதிரையில் எழுந்தருளி வரவேற்பது போன்று வித்தியாசமாக கட்சியினர் முதல்வர் விஜய்யை வரவேற்றனர்.
மதுரை அரசு மருத்துவமனைக்கு வரும் வழியில் ஓரிரு இடங்களில் தொண்டர்கள் மாலை, கட்சிக் கொடி, துண்டுகளை உற்சாக மிகுதியில் வீசினர்.
வைகை தென்கரை சாலையில் குருவிக்காரன் சாலை சந்திப்பில் முதல்வர் வந்தபோது, அவரை மீனாட்சி வேடமிட்டு வரவேற்ற குழந்தையை தூக்கி உற்சாகப்படுத்தினார்.
அரசு ராஜாஜி மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட தொடக்க விழா முடிந்த பிறகு, முதல்வர் விஜய், டீன் அருள் சுந்தரரேஷ் குமார் உள்ளிட்ட மருத்துவர்களுடன் இணைந்து குழு புகைப்படம் எடுத்துகொண்டார்.
செவிலியர் விடுதி அருகில் குவிந்து இருந்த மருத்துவர்கள், செவலியர்களை கண்டதும் ஒருவரின் செல்போனை முதல்வரே வாங்கி செல்ஃபி மற்றும் வீடியோ எடுத்தார்.
பின்னர் புரனமக்கப்பட்டு திறந்துவைத்த காந்தி அரசு அருங்காட்சியகத்தை பார்வையிட்ட முதல்வருக்கு அருங்காட்சியகம் குறித்து பல்வேறு தகவல்களை அருங்காட்சியக செயலாளர் நந்தாராவ் விளக்கினார்.
முதல்வரின் வாகனங்கள் மெதுவாக சென்ற இடங்களில் யாரும் புகுந்துவிடக் கூடாது என்பதற்காக அவரது தனி பாதுகாவலர்கள் வழிநெடுக முதல்வரின் வாகனத்துக்கு முன்பும், பக்கவாட்டிலும் ஓடினர்.
முதல்வர் விஜய்யை வரவேற்கும் வகையில் மதுரை நகர் முழுவதும் தவெகவினர் போஸ்டர்களை ஒட்டியிருந்தனர்.
மாநகராட்சியில் தற்போது ‘போஸ்டர்’ ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நகர் பகுதியில் ஓட்டிய ‘முதல்வர்’ வரவேற்பு போஸ்டர்களை கிழிக்க மாநகராட்சி அதிகாரிகள் ‘கறார்’ உத்தரவிட்டிருந்ததால் அவரது போஸ்டர்களையும் தூய்மைப் பணியாளர்கள் கிழித்தனர்.
ஒட்டிய சில மணி நேரங்களில் போஸ்டர்கள் கிழிக்கப்பட்டதால் தவெகவினர் அவர்களிடம் கேட்டனர். அதற்கு முதல்வர் வரும் பாதை சுத்தமாக இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் கூறியதும், அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
முதல்வர் விஜய்யை பார்க்க விமான நிலையம் முதல் மீனாட்சி அம்மன் கோயில் வரை வழிநெடுகிலும் ஏராளமானோர் காத்திருந்தனர்.
அவர்களுக்கான போதுமான குடிநீர் பாட்டில்கள் வழங்க எதுவும் யாரும் ஏற்பாடு செய்து கொடுக்கப்படவில்லை.
கடந்த அதிமுக, திமுக ஆட்சிக் காலத்தில் அக்கட்சியினரே அரசு நிதியை எதிர்பார்க்காமல் தலைவர்களை காத்திருக்கும் பொதுமக்கள், கட்சியினருக்கு சாப்பாடு, குளிர் பானங்கள், தண்ணீர் பாட்டில்கள் வழங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று வழக்கத்துக்கு மாறாக மதுரையில் கடும் வெயிலின் தாக்கம் இருந்தபோதிலும் நீண்ட நேரம் முதல்வர் விஜய்யை பார்க்க காத்திருந்தவர்கள் மயக்கமடைந்து ஆங்காங்கே விழுந்தனர்.
அவர்களை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், ஆம்புலன்ஸ்கள் வரவழைத்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மொத்தம் 10-க்கும் மேற்பட்டோர் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி லேசாக காயமடைந்த காட்டுராஜா (55), விக்னேஷ்(29) மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டனர். மற்றவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.