மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்த முதல்வர் விஜய், சாயரட்சை பூஜையில் பங்கேற்று சுவாமி தரிசனம் !!

மதுரை:
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு நேற்று மாலை வந்த முதல்வர் விஜய், சாயரட்சை பூஜையில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார்.

மதுரையில் அரசு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு தல்லா குளம் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த முதல்வர், மாலை 4 மணியளவில் புறப்பட்டு மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சித்திரை வீதி வழியாகச் சென்றார்.

வழியில் மக்கள் கூட்டத்தைப் பார்த்து வேனிலிருந்து கீழே இறங்கிய முதல்வர் விஜய், கிழக்கு கோபுரம் வாசல் வழியாக சித்திரை வீதிகளில் நடந்து சென்றார்.

பின்பு 4.19 மணி அளவில் அஷ்ட சக்தி மண்டபம் வழியாக கோயிலுக்குள் நுழைந்தார். அப்போது அமைச்சர்கள் நிர்மல்குமார், ரமேஷ், விஸ்வநாதன் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் வினய், ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகராட்சி ஆணையர் கவுரவ் குமார் ஆகியோர் வரவேற்றனர்.

முதல்வர் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் இந்துசமய அறநிலையத் துறை சட்டப்படி, ஆவணத்தில் கையெழுத்துவிட்டு கோயிலுக்குள் தரிசனம் செய்யச் சென்றார்.

அப்போது கோயில் நிர்வாகம் சார்பில் அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன் தலைமையில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

பின்னர் அஷ்ட சக்தி மண்டபம் வழியாக கோயிலுக்குள் சென்ற முதல்வர், அம்மன் சந்நிதி, சுவாமி சந்நிதியில் நடைபெற்ற சாயரட்சை பூஜையில் பங்கேற்று தரிசனம் செய்தார்.

மாலை 5 மணியளவில் அஷ்ட சக்தி மண்டபம் வழியாக வெளியேறினார். பின்னர் சென்னை செல்வதற்காக, முதல்வர் திறந்த வேனில் நின்றபடி பொதுமக்கள் அளித்த வரவேற்பை ஏற்றபடி விமான நிலையம் சென்றார்.

அறங்காவலர் குழு தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜனின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்ற முதல்வர் விஜய்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்த முதல்வர் விஜய்க்கு அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜனை அமைச்சர் நிர்மல்குமார், அறிமுகம் செய்து வைத்ததோடு ‘முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் தாயார்’ என குறிப்பிட்டுச் சொன்னார்.

இதைத் தொடர்ந்து முதல்வர் விஜய், அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார். மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா அழைப்பிதழில் அறங்காவலர்கள் பெயர் இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அறங்காவலர் குழு தலைவர் காலில் விழுந்து முதல்வர் ஆசீர்வாதம் பெற்றுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *