சென்னை:
கைத்திற தொழில்கள் வளர்ச்சி கழகம் சார்பில் சென்னையில் நவராத்திரி கொலு பொம்மைகள் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.
கொலு பொம்மைகள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 10 சதவீதம் சிறப்புத் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் சார்பில், நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் சிறப்பு கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, சென்னை அண்ணாசாலையில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் சிறப்பு கொலு பொம்மைகள் கண்காட்சி நேற்று தொடங்கியது.
கண்காட்சியை கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறை அரசு செயலாளர் லில்லி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
பாரம்பரிய கைவினைஞர்களுக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கில் நடத்தப்படும் இக்கண்காட்சியில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமன்றி ஆந்திரா, கர்நாடகா, கொல்கத்தா, ராஜஸ்தான் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்தும் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட கொலு பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, அஷ்டலட்சுமி செட், தசாவதாரம் செட், அறுபடைவீடு செட், வைகுண்டம் செட், மீனாட்சி கல்யாணம் செட், திருவண்ணாமலை கிரிவலம் செட், மற்றும் காஞ்சி பெரியவர் போன்ற பல்வேறு சமூக, ஆன்மீக கருத்துகளைக் கொண்ட சிறப்பான கொலு பொம்மைகள் முக்கிய அங்கம் வகிக்கிறது.
இக்கண்காட்சியில் குறைந்தபட்சம் ரூ.50 முதல் அதிகபட்சம் ரூ.1.25 லட்சம் வரையிலான பொம்மைகள் இடம் பெற்றுள்ளன. அனைத்து கொலு பொம்மைகளுக்கும் 10 சதவீத சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இக்கண்காட்சி அக்டோபர் 31-ம் தேதி வரை (ஞாயிறுக்கிழமை உட்பட) அனைத்து நாட்களிலும் தினசரி காலை 10 முதல் இரவு 8 மணி வரை நடைபெறும்.