“மழை வெள்ளத்தால் மதுரை மாநகரம் தத்தளிக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படை வசதிகளை கூட செய்து தராத திமுக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது” – தினகரன் குற்றச்சாட்டு!!

சென்னை:
“மழை வெள்ளத்தால் மதுரை மாநகரம் தத்தளிக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படை வசதிகளை கூட செய்து தராத திமுக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது” என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “மதுரையில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் தொடர் கனமழையால் மாநகரத்தின் பெரும்பாலான குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் புகுந்திருப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. மதுரை கோரிப்பாளையம், சிம்மக்கல், தல்லாகுளம், தமுக்கம், மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் என அனைத்து இடங்களும் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர், உணவு, பால், மருந்துகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட மாவட்ட நிர்வாகத்தால் செய்து தரப்படாதது கடும் கண்டனத்திற்குரியது.

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளை முன்கூட்டியே கணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததும், மழைநீர் செல்வதற்கான கால்வாய்களையும், ஓடைகளையும் முறையாக தூர்வாராததுமே பாதிப்புக்கு காரணம் என சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் பொதுமக்களும் குற்றம்சாட்டியுள்ளனர்.

எனவே, மதுரையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தருவதோடு, இனிவரும் பெருமழைக் காலங்களில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாவண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *