தமிழ்நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் மேகேதாட்டு அணையை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கிடக் கூடாது – மு.வீரபாண்டியன்!!

சென்னை:
“தமிழ்நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் மேகேதாட்டு அணையை கட்டுவதற்கு அனுமதி வழங்கிடக் கூடாது” என மத்திய அரசை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மேகேதாட்டு அணைத் திட்டத்திற்கு விரைந்து அனுமதி வழங்கிட வேண்டும் என கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார், மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீலை டெல்லியில் ( செப்.28 ) நேற்றைய தினம் சந்தித்து வலியுறுத்தியுள்ளார்.

இத்திட்டம் தொடர்பாக மத்திய நீர் ஆணையம் ஏற்கனவே மேகேதாட்டு பகுதியில் கள ஆய்வு நடத்தியுள்ளது எனவும், இந்த அணைத் திட்டத்துக்காகப் பயன்படுத்தப்படும் வனப் பகுதிக்கு ஈடாக மாற்று நிலமும் அடையாளம் காணப்பட்டு, அது குறித்த விவரங்கள் மத்திய அமைச்சரிடம் வழங்கப்பட் டுள்ளது எனவும் டி.கே.சிவக்குமார் டெல்லியில் பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளார்.

மேகேதாட்டு அணை கட்டுவதில் கர்நாடக அரசு அவசரமும் தீவிரமும் காட்டும் இவ்வேளையில், தமிழக அரசு அமைதி காப்பது அதிர்ச்சி அளிக்கிறது. மத்திய அரசு கர்நாடகத்திற்கு சாதகமாக செயல்படக்கூடிய சூழலில், தமிழக அரசு இப்பிரச்சனையில், போர்க்கால அடிப்படையில் துரிதமாக செயல்பட வேண்டும்.

உடனடியாக அனைத்து அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்களின் கூட்டத்தை தமிழக முதல்வர் கூட்டி, ஒத்தக் கருத்தை உருவாக்கிட வேண்டும்.

அதன் அடிப்படையில் அனைத்து கட்சித் தலைவர்கள் மற்றும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் பிரதமரை சந்தித்து, மேகேதாட்டு அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்த வேண்டும்.

மேகேதாட்டு அணை கட்டப்பட்டால், அது தமிழ்நாட்டின் உரிமைகளையும் மாநிலங்களுக்கிடையேயான நல்லுறவையும் பாதிக்கும். காவிரி டெல்டா பகுதியை பாலைவனம் ஆக்கிவிடும். விவசாயமும், கால்நடை வளர்ப்பும் பாதிக்கப்படும்.

விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர் களும், விவசாயத்தை நம்பியுள்ள மக்களும் வாழ்வாதாரத்தை இழந்து கடும் பாதிப்புக்கு உள்ளாவார்கள்.

அத்துடன் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படும் என்பதுடன், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு அடிப்படையில் ஏற்கனவே உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக அமைந்துவிடும் என்பதையும், பிரதமரிடம் தமிழ்நாடு தரப்பில் விளக்கிக் கூற வேண்டும்.

மேகேதாட்டு அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்திட உரிய நடவடிக்கைகள் அனைத்தையும் தமிழக அரசும், தமிழக முதல்வரும் எடுத்திட வேண்டும்.

தமிழ்நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் மேகேதாட்டு அணையை கட்டுவதற்கு அனுமதி வழங்கிடக் கூடாது என மத்திய அரசை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.” என்று மு.வீரபாண்டியன் கூறியுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *