ஆசிய விளையாட்டு போட்டியில் ஆடவருக்கான ஹாக்கி அரை இறுதியில் நேற்று நடப்பு சாம்பியனான இந்தியா, பாகிஸ்தானுடன் மோதியது.
இதில் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இந்திய அணி தரப்பில் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் 5 மற்றும் 13-வது நிமிடங்களில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்புகளை கோல்களாக மாற்றினார்.
தொடர்ந்து 23-வது நிமிடத்தில் சுக்ஜீத் சிங் அடித்த கோல் காரணமாக இந்திய அணி 3-0 என முன்னிலை வகித்தது.
ஆனால் பாகிஸ்தான் அணி மீண்டு வந்து ஆட்டத்தை 3-3 என சமநிலைக்கு கொண்டு வந்தது.
அந்த அணி தரப்பில் 30-வது நிமிடத்தில் அபு மஹ்மூத், 45-வது நிமிடத்தில் ஹன்னன் ஷாகித், 49-வது நிமிடத்தில் வாஹீத் ராணா ஆகியோர் கோல் அடித்தனர். இதனால் இந்திய அணி அதிர்ச்சியில் உறைந்தது.
போட்டி முடிவடைய 45 விநாடிகளே இருந்த நிலையில் இந்திய அணியின் அபிஷேக் பீல்டு கோல் அடித்து அசத்தினார். இதுவே வெற்றி கோலாக அமைந்தது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இறுதிப் போட்டியில் கால் பதித்தது. நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்திய அணி, மலேசியாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.