காட்டாங்கொளத்தூர்:
தொலைதூர கிராமங்களில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கும் தரமான மருத்துவ வசதிகள் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும், மருத்துவ ஆராய்ச்சிகள் அடித்தட்டு மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் அமைய வேண்டும் என்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் வலியுறுத்தினார்.
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில், தேசிய மருத்துவ அறிவியல் கழகத்தின் 66-வது ஆண்டு மாநாடு மற்றும் பட்டமளிப்பு விழாவான ‘நாம்ஸ்கான் 2026’ மாநாடு நடைபெறுகிறது.
இந்த மாநாட்டைத் தொடங்கிவைத்து தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பேசியதாவது: மருத்துவத் துறையின் ஆராய்ச்சிகளும், ஆய்வக ஆய்வுகளும் சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்குப் பயனளிக்க வேண்டும்.
ஆண்டுக்கு ஒருமுறை மருத்துவ முகாம்களை நடத்தி மருந்துகளை வழங்குவதுடன் நின்றுவிடாமல், கிராமங்களுக்கே சென்று தொடர்ச்சியான மருத்துவ வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
மருத்துவத் தொழில்நுட்பங்கள் மூலம் தொலைதூரப் பகுதிகளுக்கும் சிகிச்சை வசதிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும். மருந்துகளைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கான வழிகளையும் கண்டறிய வேண்டும்.
நாட்டின் தொலைதூரக் கிராமங்களில், மருத்துவ வசதிகள் கிடைக்காத பகுதி மக்களைச் சென்றடைவதே அனைத்து ஆராய்ச்சிகள் மற்றும் திட்டங்களின் முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும்.
தேசிய வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியை மட்டும் குறிக்காது. கல்வி, கலை, கலாச்சாரம், ஆன்மிகம், மருத்துவம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் முழுமையான வளர்ச்சி அவசியம். மக்களின் பங்கேற்பு இன்றி சமூக, தேசிய வளர்ச்சியை அடைய முடியாது.
2047-க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கு, கடைக்கோடி கிராம மக்களின் மருத்துவத் தேவைகளையும் கருத்தில் கொண்டு திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். இவ்வாறு ஆளுநர் பேசினார்.
பல்துறை அணுகுமுறை: மாநாட்டுக்குத் தலைமை வகித்த எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவ னத்தின் நிறுவனர் வேந்தர் டி.ஆர்.பாரிவேந்தர் பேசுகையில், “அறிவியல், தொழில்நுட்பத்தின் ஒருங்கிணைவு மூலம் ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான பல்துறை அணுகுமுறையை வலுப்படுத்த எஸ்ஆர்எம் கல்வி நிறுவனம் சிறந்த தளமாகும்.
பல்வேறு துறைகளின் அறிவையும் திறன்களையும் ஒருங்கிணைக்கும் பல்துறைப் பல்கலைக் கழகமாக விளங்குவதால், மருத்துவக் கல்வி மற்றும் நோயாளர் பராமரிப்பில் ஒருங்கிணைந்த அணுகுமுறையை மேம்படுத்துவதற்கு ஏற்ற சூழல் உள்ளது” என்றார்.
அக்.8 முதல் 11-ம் தேதி வரை நடைபெறும் மாநாட்டில் 1,400-க்கும் மேற்பட்ட மருத்துவ வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள், சுகாதாரத் துறை நிபுணர்கள் பங்கேற்கின்றனர்.
மருத்துவ ஆராய்ச்சியை ஊக்குவித்தல், நவீன தொழில்நுட்பங்களைச் சிகிச்சையில் பயன்படுத்துதல், மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்துதல், கூட்டு ஆராய்ச்சியை வலுப்படுத்துதல் ஆகியவை மாநாட்டின் நோக்கங்களாகும்.
நுண்ணுயிர் எதிர்ப்பு, CAR-T உயிரணுச் சிகிச்சை, அரிய மரபணுக் கோளாறுகள், நீரிழிவு நோய் ஆராய்ச்சி, பெருந்தொற்றுத் தடுப்பு, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட சமகால மருத்துவத் தலைப்புகளில் அமர்வுகள் நடைபெறுகின்றன.
மருத்துவ ஆராய்ச்சியின் முன்னேற்றங்கள் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் தரமான சிகிச்சை கிடைக்க உதவ வேண்டும் என்பதே மாநாட்டின் முக்கிய நோக்கமாகும்.
தொடக்க விழாவில் தேசிய மருத்துவ அறிவியல் கழகத் தலைவர் டாக்டர் திகம்பர் பெஹேரா, இந்திய தேசிய அறிவியல் கழகத் தலைவர் டாக்டர் சேகர் சி.மாண்டே, தேசிய மருத்துவ ஆணையத் தலைவர் டாக்டர் அபிஜாத் சேத், எஸ்ஆர்எம் கல்விப் பிரிவு இணை வேந்தர் டாக்டர் பி.சத்திய நாராயணன், மாநாட்டு ஒருங்கிணைப்புத் தலைவர் டாக்டர் ஆர்.ஜெயந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.