சென்னை:
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் புதிதாக அமைக்கப்படும் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து முதல் ராக்கெட் 2027 மார்ச் அல்லது ஏப்ரலில் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.
இதுகுறித்து இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
ஜிஎஸ்எல்வி-எஃப்18 ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட என்விஎஸ்-03 செயற்கைக் கோள் சுமார் 38 ஆயிரம் கி.மீ. உயரம் கொண்ட நீள்வட்டப் சுற்றுப்பாதையில் முதலில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.
அதன்பிறகு அதில் உள்ள உந்துவிசை இயந்திரத்தின் உதவியுடன் மேலும் 5,500 கி.மீ. தூரத்துக்கு செயற்கைக் கோளை உயர்த்தினோம்.
தொடர்ந்து, திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதைக்கு செயற்கைக் கோளை மாற்றும் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.
இந்தியாவுக்கு சொந்தமாக தற்போது 56 செயற்கைக் கோள்கள் உள்ளன. எனினும், நாட்டின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யவும், பல்வேறு தகவல்களை ஆராய்ந்து தொடர்ந்து கண்காணிக்கவும் ஆயிரக்கணக்கான செயற்கைக் கோள்கள் நமக்கு தேவைப்படுகின்றன.
‘ககன்யான்’ திட்டம் சிறப்பான முறையில் முன்னேறி வருகிறது. இத்திட்டத்துக்காக இதுவரை சுமார் 8,000 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
விண்ணுக்கு மனிதர்களை அனுப்புவதற்கு முன்னதாக ஆளில்லா விண்கலங்களை அனுப்பி சோதனை செய்யப்பட உள்ளது.
இதற்கான முதல்கட்ட ஏவுதல் பணிகள் நடந்து வருகின்றன. ஆளில்லா விண்கல சோதனைகளைத் தொடர்ந்து, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேபோல, சந்திரயான்-4, சந்திரயான்-5 ஆகிய திட்டங்களுக்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, சந்திரயான்-4 திட்டத்தை 2028-ம் ஆண்டு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
நிலவு குறித்த ஆராய்ச்சிகளை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்லும் வகையில் இத்திட்டங்களுக்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விண்வெளி, சூரியன் தொடர்பான அறிவியல் ஆய்வுகள் மூலம் இதுவரை சுமார் 37 டெராபைட் அளவிலான தகவல்கள் பெறப்பட்டுள்ளன.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில், புதிய ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.
இந்த ஏவுதளத்தில் இருந்து 2027 மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் முதல் ராக்கெட் விண்ணில் ஏவப்படும். இதற்கான பணி தீவிரமாக நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.