தவெகவினர் தமிழகத்தையே சூறையாடிக் கொண்டிருக்கிறார்கள்; மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பில்லை;கனிமொழி கண்டனம்!!

சென்னை:
‘தவெகவினர் தமிழகத்தையே சூறையாடிக் கொண்டிருக்கிறார்கள்’ என்று திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை, அண்ணா அறிவாலயத்தில் கனிமொழி தலைமையில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில், தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள், பொதுமக்களுக்கு பாதுகாப்பு இன்மை மற்றும் தவெக ஆட்சியின் நிர்வாகச் சீர்கேடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் கனிமொழி கூறியதாவது: எதிர்க்கட்சிகள், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை எடுத்து சொல்லும் பொழுது ஒரு அமைச்சர், கொலை சம்பவங்களைச் சாதாரண விஷயத்தைப் போல பேசுகிறார். குற்றச் சம்பவங்கள் நடப்பதைசரி செய்ய வேண்டும் என்ற எண்ணம் கூட அவர்களுக்கு இல்லை.

எதையாவது ஒரு காரணத்தை சொல்லி நியாயப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான் அவர்களது குறிக்கோளாக உள்ளது. ஆட்சிக்கு வந்த பின் அனைத்தையும் கற்றுக் கொள்ள 6 மாத காலம் அவகாசம் கேட்டார்கள்.

தமிழக மக்களுக்கு ஆபத்தான விஷயங்களைத்தான் நீங்கள் கற்றுக் கொடுத்துள்ளீர்கள். ஏனென்றால் பல குற்றங்களில் ஈடுபட்டு இருப்பவர்கள் ஆளும் கட்சிகளைச் சேர்ந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

பொது பிரச்சினைகளைக் கோரிக்கை வைப்பதற்காக சட்டப் பேரவை துணைத்தலைவர் வீட்டுக்கு சென்றவரை தாக்கியும், மிரட்டியும், அவர்களுக்குச் சாதகமான வீடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ளனர்.

தவெகவினரால் பாதிக்கப்பட்டவர்கள் தவெகவினர் மீது குற்றம் சுமத்தி வழக்கு தொடரும் பொழுது அந்த வழக்கை மிரட்டி வாபஸ் செய்யக் கூடியசூழல் தமிழகத்தில் உருவாகியுள்ளது.

தொடர்ந்து இதுபோன்று தவெகவினரை எதிர்த்து குற்றம் சுமத்துபவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். மிரட்டப்படுகிறார்கள். ஒரு மாவட்ட ஆட்சியருக்கே தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை.

இவ்வளவு நாட்கள் இல்லாமல் ஒரு மாவட்ட ஆட்சியருக்குப் புதிதாக ஒரு காவல் அலுவலரை நியமித்து பாதுகாப்பு கொடுப்பதற்கான அவசியம் என்ன? இந்த விவகாரத்துக்கும் தவெகவினர் திரைக்கதை எழுதி ஏதாவது வசனங்களை சொன்னாலும் சொல்வார்கள்.

தவெக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பார்கள் என முதல்வர் சொன்னார். ஆனால் தவெகவினர் தற்பொழுது தமிழகத்தையே சூறையாடிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு கனிமொழி கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *