தமிழகத்தில் பட்டாசு ஆலை முதல் பால் பண்ணை வரை எங்குமே தொழிலாளி களுக்கு பாதுகாப்பு என்பதே இல்லை – எடப்பாடி பழனிசாமி கண்டனம் !

தமிழகத்தில் பட்டாசு ஆலை முதல் பால் பண்ணை வரை எங்குமே தொழிலாளிகளுக்கு பாதுகாப்பு என்பதே இல்லை என தமிழக எதிர்க் கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் அருகே காக்களூரில் ஆவின் பால் பண்ணை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த பண்ணையில் நேற்று இரவு பால் பாக்கெட்களை பெட்டிகளில் அடுக்கும் பணியில் ஒப்பந்த ஊழியரான உமா ராணி என்பவர் ஈடுபட்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக அவர் அணிந்து இருந்த துப்பட்டா மற்றும் தலைமுடி, பால் எடுத்துச் செல்லும் கன்வேயர் பெல்ட்டில் சிக்கியதால் அவர் நிலைகுலைந்து போனார். ஆனால் சுதாரித்து எழுவதற்குள் அவரது தலை பெல்ட்டில் சிக்கி துண்டானது. இதனையடுத்து அந்த சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து உயிரிழந்தார்.

இதையடுத்து ஆவின் நிர்வாகத்தினர் இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருவள்ளுவர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் பணியாளர்களின் பாதுகாப்பு விவகாரத்தில் மெத்தனமாக செயல்பட்டதாலேயே உமா ராணியின் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக உறவினர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:-

திருவள்ளூர் மாவட்டம் காக்களூரில் உள்ள ஆவின் பால் பண்ணையில் பணிபுரிந்து வந்த உமா ராணி என்ற பெண் ஊழியர் கன்வேயர் பெல்டில் துணி, தலைமுடி சிக்கியதால் பரிதாபமாக உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன்.

உயிரிழந்த திருமதி. உமாராணி அவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும் வருத்தங்களையும் தெரிவித்து கொள்கிறேன்.

பால் பண்ணையில் பணி செய்யும் ஊழியர்கள் ஆபத்தான இயந்திரங்களுக்கு இடையில் பணிபுரியும் போது, அவர்களுக்கான பாதுகாப்பை ஆவின் நிர்வாகம் உறுதி செய்திருக்க வேண்டும்.

ஆனால் இந்த விடியா திமுக ஆட்சியில், பட்டாசு ஆலை முதல் பால் பண்ணை வரை எங்குமே தொழிலாளிகளுக்கு பாதுகாப்பு என்பதே இல்லை. பாலில் ஒரு முடி கூட உதிரக் கூடாது என்பதே ஆவின் நிறுவனத்தின் பாதுகாப்பு நெறிமுறை.

ஆனால் முறையான பாதுகாப்பு வசதிகளை இந்த விடியா திமுக அரசு ஏற்படுத்தித் தராததன் விளைவாகவே இன்றைக்கு ஒரு பெண் தொழிலாளி தன் தலைமுடி சிக்கி, தலை துண்டிக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார்.

பாதுகாப்பு விவகாரத்தில் மெத்தனப் போக்குடன் செயல்படும் விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

உயிரிழந்த உமாராணி அவர்களின் குடும்பத்தாருக்கு உரிய நிவாரணத்தை வழங்குவதுடன், இனி இதுபோன்ற விபத்துகள் நிகழாவண்ணம் ஆவின் பால் பண்ணைகளில் ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்படுவதை உறுதிசெய்யுமாறு விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *