2026-ல் கட்சித் தலைவர் விஜய்யை தமிழக முதல்வராக்க அனைவரும் பாடுபட வேண்டும் – புஸ்சி ஆனந்த்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வருகிற அக்டோபர் 27-ந்தேதி விக்கிரவாண்டியில் நடைபெறுகிறது.

நடிகர் விஜய் கட்சி தொடங்கிய பின்னர் நடைபெறும் முதல் மாநாடு என்பதால் இதை பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இது குறித்து விஜய் ஏற்கனவே கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளார்.

இதை தொடர்ந்து கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் செய்து கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசித்து வருகிறார். நேற்று அவர் பெரம்பலூரில் நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.

விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழக மாநில மாநாட்டிற்கு குடும்பத்துடன் வர வேண்டும். கட்டுப்பாடு, ஒழுக்கத்துடன், பெண்களை மாநாட்டிற்கு பாதுகாப்புடன் அழைத்து வரவேண்டும்.

கட்சியின் தலைவர் விஜய் தான் உங்களை மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்க என்னை அனுப்பி வைத்துள்ளார். எனவே மாநாட்டிற்கு அனைவரும் வர வேண்டும். கட்சியின் முதல் அரசியல் மாநாடு வெற்றி மாநாடாக தான் இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

கட்சிக்கு உண்மையாக உழைப்பவா்களுக்கு மட்டும் தான் பதவிகள் வழங்கப்படும். அன்றையிலிருந்து இன்றைக்கு வரைக்கும் மக்களுக்கு சேவை செய்து கொண்டு நலத்திட்டம் கொடுத்த இயக்கம், கட்சி என்று சொன்னால் அது தமிழகம் வெற்றிக்கழகம் தான். இப்போது விஜய் உச்சத்தில் இருப்பதால் கட்சிக்கு பலர் வருவார்கள். அவர்களை வரவேற்கிறோம். வர வேண்டாம் என்று சொல்லவில்லை.

ஆனால், 32 ஆண்டுகளாக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்தவர்கள் நீங்கள்தான். உங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் தலைவர் விஜய் வந்து நிற்பார். தமிழக வெற்றி கழகம் துணை நிற்கும்.

எனவே, சந்தேகப்பட வேண்டாம். எதுவாக இருந்தாலும் ரசிகர்களுக்கு பிறகுதான். காசு, பணம் இருந்தாலும் ரசிகர்களை மீறி எதுவும் நடக்காது. ஒரே ஒரு தொண்டனாக இருந்தாலும் சரி, தோழனாக இருந்தாலும் சரி, அவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் கைவிடப்பட மாட்டார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக அரியலூரில் நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் புஸ்சி ஆனந்த் பேசுகையில், அடுத்த மாதம் நடைபெறும் மாநாட்டில் கட்சியினர் திரளாக கலந்து கொள்ள வேண்டும். மாநாட்டுக்கு வரும்போது கவனமாக வருகை தர வேண்டும். 2026-ல் கட்சித் தலைவர் விஜய்யை தமிழக முதல்வராக்க அனைவரும் பாடுபட வேண்டும் என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *