பருவமழையினால் ஏற்படும் சவால்களை எதிர்கொண்டு பொது மக்களின் துயர் துடைக்க அரசு நிர்வாகம் மொத்தமும் ஓரணியாக நின்று செயல்பட்டால் வெற்றி நிச்சயம் – முதலமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவு!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் (அக்டோபர்) தொடங்க உள்ளது. வருகிற 15-ந்தேதிக்கு பிறகு எப்போது வேண்டுமானாலும் வடகிழக்கு பருவமழை தொடங்கும்.

இதன் மூலம் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கை கள் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் விரிவாக ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன், செந்தில் பாலாஜி, தலைமை செயலாளர் முருகானந்தம், வருவாய் பேரிடர் துறை செயலாளர், பொதுத்துறை செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர், போலீஸ் டி.ஜி.பி., தீயணைப்பு துறை இயக்குனர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

வடகிழக்கு பருவ மழை பேரிடர்களின் தாக்கத்தினை திறம்பட எதிர்கொள்ள தேவையான பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்த வகையில், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் 14.9.2024 மற்றும் 21.9.2024 ஆகிய நாட்களில் மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாநகராட்சி ஆணையர்களுடன் வடகிழக்கு பருவமழை குறித்த ஆயத்தப் பணிகள் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடத்தி அலுவலர்களுக்கு அவர் அறிவு ரைகளை வழங்கியிருக்கிறார்.

சரியான நேரத்தில், பொதுமக்களுக்கு வழங்கப்படும் வானிலை முன் எச்சரிக்கையினால் நாம் பெரிய அளவிலான சேதங்களை தவிர்க்க முடியும்.

பேரிடர்களை எதிர்கொள்வதில், முன்னெச்சரிக்கை தகவல்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால், நமது அரசு அதற்கு தேவையான உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் தனிக்கவனம் செலுத்தி வருகிறது.

பெய்த மழையின் அளவு எவ்வளவு? என்பதை அது பெய்கின்ற நேரத்தில் தெரிந்தால்தான், அணைகளில் நீர் திறப்பு மேலாண்மை, வெள்ள முன்னெச்சரிக்கை தகவல்களை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை சரியாகச் செய்ய முடியும்.

அதற்காக, நாம் தற்போது 1400 தானியங்கி மழை மானிகளையும், 100 தானியங்கி வானிலை மையங்களையும் நிறுவி நிகழ்நேர தகவல்களை பெற்று வருகிறோம்.

வானிலை முன்எச்சரிக்கை, தற்போதைய வானிலை, பெறப்பட்ட மழை அளவு, நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு உள்ளிட்ட விபரங்களை தமிழிலேயே அறிந்துகொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு டி.என்.-அலாட் என்னும் கைப்பேசி செயலியை உருவாக்கியுள்ளது.

மழைக்காலத்தில் அதிகம் பாதிக்கப்படுவது மீனவ தோழர்கள் தான். ஆழ்கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு புயல், கன மழை குறித்த தகவல்களை நவீன தொலைத் தொடர்பு சாதனங்கள் மூலமாக உரியநேரத்தில் கொண்டு சேர்க்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

நாட்டிற்கு முன்னுதாரணமாக பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளுக்கு, வார்டு, தெருவாரியான வெள்ள அபாய எச்சரிக்கை வழங்க சென்னை நிகழ்நேர வெள்ள முன்னறிவிப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

முதியோர், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்குத் தேவையான உதவிகளை வழங்க முன்கூட்டியே திட்டமிட்டு மாவட்ட நிர்வாகம் செயல்படுவது மிக மிக அவசியமாகிறது.

வெள்ளப் பேரிடர்கள் ஏற்படும் பொழுது தாழ்வான பகுதிகளிலிருந்து முன்கூட்டியே வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்வது மிக முக்கியம்.

இந்த பணிகளை தமிழ்நாடு அரசின் அனைத்து களப் பணியாளர்களும், பொதுமக்களுடன் இணைந்து அவர்களுக்கு அறிவுறுத்தி வெள்ளத்திற்கு முன்னரே நிவாரண மையங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

அவர்களுக்கு தேவையான தூய்மையான குடிநீர், கழிவறை, தடையற்ற மின்சாரம் உரிய நேரத்தில் உணவு ஆகியவற்றை வழங்க வேண்டும்.

வெள்ளம் ஏற்பட்ட உடன் அரசு இயந்திரம் எவ்வளவு விரைவாக செயல்பட வேண்டுமோ அவ்வ ளவு விரைவாகச் செயல்பட வேண்டும். ஓர் உயிரிழப்பு கூட ஏற்படக்கூடாது என்ற நோக்கத்துடன் செயல்பட வேண்டும்.

அதற்கு தேவையான நீர் இறைக்கும் எந்திரம், மர அறுப்பான்கள், ஜே.சி.பி., படகுகள் போன்ற கருவிகளை தாழ்வான பகுதிகளுக்கு அருகில் முன்கூட்டியே சென்று நிறுத்த வேண்டும்.

பல்வேறு வெள்ளத் தடுப்பு பணிகளை, வடகிழக்கு பருவமழை துவங்கும் முன்னரே விரைந்து முடிக்க வேண்டும். மாவட்டத்தைப் பற்றி முழுமையாக அறிந்த மூத்த அலுவலர்களை கண்காணிப்பு அலுவலர்களாக நியமித்திருக்கிறோம். அவர்கள் மழைக்கு முன்னதாகவே தங்களது பணிகளை தொடங்கியாக வேண்டும்.

சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள் அந்தந்த பகுதிகளில் ஆயத்தப் பணிகள் முறையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

வெள்ளத் தடுப்பு பணிகளை மட்டுமல்ல, ஆண்டு தோறும் நாம் மேற்கொள்கின்ற தூர்வாரும் பணிகள், பாலங்கள், சிறுபா லங்களில் கழிவுகளை அகற்றுதல், நீர்நிலைகளின் கரைகளை வலுப்படுத்துதல், அறுந்து விழக்கூடிய நிலையில் உள்ள மின் கம்பிகளை சரிசெய்தல் உள்ளிட்ட பணிகளும் சரியாக நடைபெற்று வருகிறதா? என்பதையும் ஆய்வின்போது கண்டறிய வேண்டும்.

வெள்ளக் காலம் என்றாலே மாணவர்கள் ஆர்வத்தால் ஏரி, குளங்கள் போன்ற நீர்நிலைகளுக்கு சென்று விளையாடுவதால், உயிரிழப்புகள் ஏற்படுகிறது.

இதனை தடுப்பதற்கு, பெற்றோர்களுக்கும், மாணவச் செல்வங்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

வெள்ளம், புயல் போன்ற பேரிடர்களில் தகவல் தொடர்பு, மின்சார வசதி போன்ற அத்தியாவசிய சேவைகளை முடிந்தவரை தடையின்றி வழங்கப்பட வேண்டும்.

பாதுகாப்பான குடிநீர், பால், உணவுப்பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

வெள்ளத்தினால் நோய்த் தொற்று ஏதும் ஏற்டாமல் இருக்க உரிய பொது சுகாதார சேவை மற்றும் மருத்துவ சேவைகளை வழங்க வேண்டும்.

அனைத்துத் துறை அலுவலர்க ளும் ஒருங்கிணைந்து பணியாற்றினால் மட்டுமே இதனை உறுதி செய்ய முடியும்.

பேரிடர் மேலாண்மையில், தன்னார்வலர்களது பங்கும் மிகவும் அவசியமானதாகும். எனவே தேடல், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தன்னார்வலர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கென முறையான செயல்திட்டத்தினை மாவட்ட நிர்வாகம் உருவாக்க வேண்டும்.

எந்த ஒரு சவாலாக இருந்தாலும், அதில் ஈடுபடும் அனைவரும் ஒருமித்த கருத்தோடு ஓரணியாக நின்று செயல்பட்டால், அதில் வெற்றி என்பது 100 சதவீதம் சாத்தியம்.

பருவமழையினால் ஏற்படும் சவால்களை எதிர்கொண்டு பொது மக்களின் துயர் துடைக்க அரசு நிர்வாகம் மொத்தமும் ஓரணியாக நின்று செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

இவ்வாறு அவர் பேசினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *