பிற துறைகளுடன் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்ட காவல்துறையினர்!!

சென்னை:
சென்னையில் பெய்து வரும் தொடர் மழையையடுத்து பிற துறைகளுடன் ஒருங்கிணைந்து போலீஸார் நேற்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். வட கிழக்கு பருவமழை சென்னையில் தீவிரம் அடைந்துள்ளது.

இதையடுத்து, சென்னை மாநகராட்சி, பொதுப்பணித்துறை, மின்சாரத்துறை உட்பட பிற துறைகள் மழை மீட்புபணிகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுடன் சென்னை காவல் துறையினரும் கைகோத்து நேற்று பணியாற்றினர்.

மேலும், பருவ மழையை முன்னிட்டு, அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுப்பதற்கும், மீட்பு பணிகளுக்காகவும் சென்னையில் உள்ள 12 காவல் மாவட்டங்களிலும் தலா ஒரு பேரிடர் மீட்பு குழுக்கள் மற்றும் கட்டுப்பாட்டு அறைகளை சென்னை போலீஸார் அமைத்திருந்தனர்.

பேரிடர் மீட்புநடவடிக்கைக்காக காவல் ஆணையாளர் அலுவலகத்தில் தலைமை கட்டுப்பாட்டு அறையும் (044-23452437) தனியாக அமைக்கப்பட்டுள்ளது.

போலீஸார் அமைத்துள்ள ஒவ்வொரு மீட்பு குழுவிலும் தலாஒரு தலைமைக் காவலர் தலைமையில் 10 போலீஸார் இடம் பெற்றுள்ளனர். ஒவ்வொரு மீட்பு குழுவுக்கும் மீட்பு பணிகளுக்காக தலா ஒரு வாகனம் என 12 வாகனங்களும், ரப்பர் படகு, மிதவை ஜாக்கெட்டுகள், கயிறு உட்பட 21 மீட்பு உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன.

பேரிடர் மீட்பு குழுவில் உள்ள போலீஸாருக்கு தனித்துவமான ஜாக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த குழுவில் உள்ள போலீஸார் நீச்சல் மற்றும் மீட்பு பணிகளுக்கான பிரத்யேக பயிற்சிகள் பெற்றவர்களாக உள்ளனர்.

போக்குவரத்து போலீஸ்: இது ஒருபுறம் இருக்க போக்குவரத்து போலீஸார், மழைநீர் தேங்கி நின்ற சுரங்கப்பாதைகள் மற்றும் சாலைகளில் இரும்பு தடுப்புகளை அமைத்தனர்.

தண்ணீர் தேங்கிபோக்குவரத்து நெரிசல் ஏற்பட்டபகுதிகளில் உடனடியாக போக்குவரத்தில் மாற்றம் செய்து வாகனங்கள்தங்கு தடையின்றி செல்லதேவையான நடவடிக்கைகளை போக்குவரத்து போலீஸார் மேற்கொண்டனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *