சபரிமலையில் ஏற்கெனவே பதிவு செய்த நேரத்தில் சென்றால், சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்யலாம் – தமிழக பக்தர்களுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுறுத்தல்!!

சபரிமலையில் ஏற்கெனவே பதிவு செய்த நேரத்தில் சென்றால், சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்யலாம் என்று தமிழக பக்தர்களுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுறுத்தி உள்ளார்.

தேவையற்ற நெரிசலை தவிர்க்க, தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுரை வழங்கி உள்ளார். அதன் விபரம்:

சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கூட்ட நெரிசலை தவிர்க்க தரிசன வரிசைக்கான டிஜிட்டல் முன்பதிவு செய்ய வேண்டும்.

அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். இதன்மூலம் சபரிமலையில் அதிக நெரிசலை தவிர்க்கலாம் என்று கேரள காவல்துறை அறிவித்துள்ளது.

சபரிமலையில் நேற்று முன்தினம் வரை 11.12 லட்சத்துக்கு மேற்பட்டோர் தரிசனத்துக்கு சென்றுள்ளனர். கடந்த 15-ம் தேதி முதல் 1.95 லட்சம் பேர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்துக்கு முன்னரோ, பின்னரோ வந்துள்ளனர்.

ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரத்தை பின்பற்றாமல் தரிசனத்துக்கு வருவோர் எண்ணிக்கை கடந்த 15-ம் தேதி முதல் அதிகரிப்பதை இது குறிக்கிறது.

எனவே, குறிப்பிட்ட நேரத்தில் பக்தர்கள் தரிசனம் செய்ய வந்தால், சிரமம், நெரிசல் இன்றி, சுமுகமாக சுவாமி தரிசனம் செய்யலாம் என கேரள மாநில காவல் துறை வலியுறுத்தியுள்ளது. இதை பக்தர்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

‘பதினெட்டாம் படியை அடைய வரிசை முறையை பின்பற்றவும். பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு செல்லும்போது கூட்டத்தின் அளவை கண்டு அதற்கேற்ப செல்லவும். இலவச உதவி எண் ‘14432’-ஐ பயன்படுத்தி எந்தவித உதவிக்கும் காவல் துறையை அணுகலாம்.

சந்தேகத்துக்கிடமான நபர்கள் இருந்தால் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கவும். ஒதுக்கப்பட்ட நிறுத்தங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்தவும். குழந்தைகள், வயதான பெண்கள் அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும் என்பது உட்பட 17 அறிவுரைகளை கடைபிடிக்குமாறு டிஜிபி வலியுறுத்தி உள்ளார்.

வரிசையில் முந்தி செல்ல தாவி குதிக்க கூடாது. ஆயுதங்கள், வெடிபொருட்களை கொண்டு செல்ல கூடாது என்று செய்யக்கூடாதவை என மேலும் 17 அறிவுரைகளையும் டிஜிபி சங்கர் ஜிவால் வழங்கி உள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *