ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக நிவாரணப் பொருட்களை ஆய்வு செய்த கூடுதல் தலைமை செயலாளர் அமுதா !!

விழுப்புரம்:
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக நிவாரணப் பொருட்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த பொருட்கள் விழுப்புரம் ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்விளையாட்டரங்கில் வைக்கப்பட்டு, பிரித்து அனுப்பி வைக்கப்படுகின்றன.

இந்த பணியை நேற்று ஆய்வு செய்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச்செயலாளர் அமுதா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் பெரியளவில் பாதிப்பை சந்தித்துள்ளன. கடந்த இரு நாட்களுக்கு முன்பு தமிழக முதல்வர் விழுப்புரம் மாவட்டத்துக்கு வந்து, பாதிப்புகளைப் பார்வையிட்டுச் சென்று உள்ளார்.

புயலால் வாழ்வாதாரம் இழந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,000 நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்த நிலையில், அதற்கான அரசாணை வருவாய்த்துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து இன்று (டிச. 5)முதல் நியாய விலைக் கடைகளில் டோக்கன் வழங்கப்பட்டு, நியாயவிலைக் கடைகள் மூலம் நிவாரணத் தொகை வழங்கும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது.

கடந்த 3 நாட்களாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொட்டலங்கள், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்தடையும் நிவாரணப் பொருட்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

விழுப்புரம் மாவட்டத்தில் 7 பகுதிகளைத் தவிர மற்ற பகுதிகளுக்கு மின் விநியோகம் வழங்கப்பட்டுவிட்டது. அது போன்று குடிநீர் விநியோகமும் சீரான முறையில் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த 3 நாட்களில் மட்டும் விழுப்புரம் மாவட்டத்தில் உணவுப் பொட்டலங்கள், உணவுப் பொருட்கள் உள்ளிட்டவை சுமார் 3 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. 105 சமுதாய சமையல் கூடங்கள் மூலம் உணவு தயாரித்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

பிற மாவட்டங்களில் இருந்து வரும் உணவுப் பொருட்கள் உள்ளிட்டவை விழுப்புரம் மாவட்டத்தின் அந்தந்த எல்லைக்குட்பட்ட வட்டங்களைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு அங்கேயே வழங்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் புயல் சேதப் பாதிப்பு அதிகளவில் இருப்பதால், முழுமையான கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.

இந்த பணிகள் விரைவில் நிறைவு பெறும். புயலால் பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரம் இழந்த குடும்பங்கள் அனைத்துக்கும் ரூ.2,000 நிவாரணத் தொகை வழங்கப்படும். ஒரு நாளைக்கு 100 பேர் வீதம் தொகை வழங்கப்படும் என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *