நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் ஆஜராக வேண்டுமென திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு!

திருச்சி:
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் ஆஜராக வேண்டுமென திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சியின் முக்கிய பிரமுகரான சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட் போது அவரது செல்போனில் பதிவு செய்யப்பட்டிருந்த சில ஆடியோக்கள் ‘லீக்’ ஆனது.

துரைமுருகனுடன் பேசிய சீமான், மூத்த முக்கிய நிர்வாகிகள் குறித்து அவதூறாக பேசியதாக சில ஆடியோக்கள் வெளியானது.

அதனை சீமானும் மறுக்கவில்லை. அதே நேரத்தில் திருச்சி எஸ்பி வருண்குமார் ஐபிஎஸ், சாட்டை துரைமுருகனின் செல்போன்களில் இருந்த ஆடியோக்களை எடுத்து கசிய விட்டதாக சீமான் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

திருச்சி எஸ்பியாக இருந்த வருண்குமார், நாம் தமிழர் கட்சி பிரமுகரான சாட்டை துரைமுருகனை கைது செய்து சிறையில் அடைத்து திட்டமிட்டு பழிவாங்குவதாகவும், சீமான் புகார் கூறியிருந்தார்.

மேலும் குறிப்பிட்ட சில சாதியினரை சாதி வன்மத்துடன் எஸ்பி வருண்குமார் அணுகி வருவதாக சீமான் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமார், புதுக்கோட்டை எஸ்பியும் வருண்குமாரின் மனைவியுமான வந்திதா பாண்டே ஆகியோரை சில எக்ஸ் கணக்குகளில் இருந்து ஆபாசமாகவும் தரக்குறைவாகவும் விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிடப்பட்டன.

தொடர்ந்து வருண்குமார் ஐபிஎஸ் தரப்பு சீமானுக்கு நோட்டீஸ் அனுப்பிய நிலையில் அது தொடர்பாக 15 விளக்கத்தை சீமான் அளித்திருந்தார்.

ஆனால் தங்கள் கேள்விகள் எதற்கும் பதில் அளிக்கவில்லை எனக் கூறி வருண்குமார் திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் சீமான் மீது வழக்கு தொடர்ந்தார்.

மேலும், புகார் தொடர்பாக கடந்த 30ஆம் தேதி திருச்சி நீதிமன்றத்தில் வருண்குமார் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

இதற்கிடையே வருண்குமார் ஐபிஎஸ் மற்றும் அவரது மனைவி வந்திதா பாண்டே ஆகியோரை டிஐஜியாக பதவி உயர்வு செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக கடந்த 8ஆம் தேதி திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக வருண்குமார் ஆஜராகி தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார்.

இதனை குறித்துக் கொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை இன்றைக்கு ( 21.01.25 ) ஒத்தி வைத்து இருந்தார்.

இந்நிலையில், டிஐஜி வருண்குமார் ஐபிஎஸ் தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணை இன்று திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கு தொடர்பாக வருண்குமார் ஐபிஎஸ் தாக்கல் செய்த ஆவணங்கள் சீமானுக்கு அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டார்.

ஏற்கனவே பெரியார் குறித்த பேச்சால் சீமானுக்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புகார் அளிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது வருண்குமார் ஐபிஎஸ் தாக்கல் செய்த அவதூறு வழக்கின் விசாரணைக்கும் சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *