நாகர்கோவில்:
சாமிதோப்பு அய்யா வைகுண்டரின் 193-வது அவதார தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இதையடுத்து நேற்று அய்யா வைகுண்டர் விஞ்சை பெற்ற திருச்செந்தூர் கடற்கரை பகுதியில் உள்ள பதியில் இருந்து வாகன பேரணி நாகர்கோவிலுக்கு புறப்பட்டது. இந்த பேரணியானது நேற்று இரவு நாகராஜா திடலை வந்தடைந்தது.
இதேபோல் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்ட வாகன பேரணியும் நேற்று இரவு நாகராஜா திடலை வந்தது. இதைத்தொடர்ந்து அங்கு மாசி மாநாடு நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து அய்யா வைகுண்டரின் அவதார தின ஊர்வலம் நாகராஜா திடலில் இருந்து இன்று காலை 5.10 மணிக்கு புறப்பட்டது. ஊர்வலத்திற்கு பாலபிரஜாபதி அடிகளார் தலைமை தாங்கினார்.

ஊர்வலத்திற்கு ராஜ வேல், பாலஜனாதிபதி, பையன் கிருஷ்ண நாம் மணி, பையன் அம்ரிஷ் செல்லா, பையன் கவுதம் ராஜா, பையன் கிருஷ்ண ராஜ், பையன் செல்லவடிவு, பையன் நேம்ரிஷ் செல்லா, விஸ்வநாத் பையன், பால. கிருஷ், வைபவ், யுகஜன நேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊர்வலத்தில் செண்டை மேளம் முழங்க மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அகிலத்திரட்டு ஏந்திய அய்யாவின் வாகனம் முன் சென்றது. அதைத்தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அணிவகுத்து சென்றார்கள்.
அப்போது காவி உடை அணிந்தும், கையில் காவிக்கொடிகளை ஏந்தியபடி பக்தர்கள் “அய்யா சிவ சிவ.. அரகர அரகரா..”என்ற பக்தி கோஷத்தை எழுப்பினர். மேலும் பல பக்தர்கள் தலையில் சந்தனக்குடம் சுமந்து சென்றனர்.
ஊர்வலத்தில் ராபர்ட்புரூஸ் எம்.பி. மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஊர்வலம் மணிமேடை சந்திப்பு வழியாக சவேரியார் கோவில் சந்திப்பு பகுதிக்கு வந்தது. அங்கு பிற மதத்தை சேர்ந்தவர்கள் ஊர்வலத்திற்கு வரவேற்பு கொடுத்தனர்.
பின்னர் ஊர்வலம் கோட்டார், இடலாக்குடி, சுசீந்திரம், வழுக்கம்பாறை, ஈத்தங்காடு, வடக்கு தாமரைகுளம் வழியாக முத்திரி கிணற்றங்கரையை சுற்றி வந்த ஊர்வலம் மதியம் தலைமை பதியை வந்தடைந்தது.
ஊர்வலத்தில் சிறுவர், சிறுமிகள் கோலாட்டம் ஆடியபடி சென்றனர். ஊர்வலத்தில் குமரி மாவட்டத்தை சேர்ந்த அய்யாவழி பக்தர்கள் மட்டுமின்றி நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும், கேரளாவில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு மோர், தண்ணீர், பானகாரம் தர்மங்கள் வழங்கப்பட்டது. பல்வேறு இடங்களில் அன்னதானமும் வழங்கப்பட்டது.
அவதார தினத்தை யொட்டி சாமிதோப்பு தலைமை பதிக்கு நேற்று இரவு பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது. சாமிதோப்பு ரதவீதிகள் முழுவதும் பக்தர்கள் தலையாக காட்சியளித்தது. இன்று அதிகாலை முதலே பக்தர்கள் முத்திரி கிணற்றில் குளித்துவிட்டு குடும்பத்தோடு அய்யா வைகுண்டரை வழிபட்டனர்.
சாமிதோப்பு பதியில் தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து அய்யாவை தரிசனம் செய்தனர். அப்போது பக்தர்கள் அய்யாவிற்கு வெற்றிலை, பாக்கு, பழம், பூ ஆகியவற்றை சுருளாக வைத்தனர்.
அய்யா வைகுண்டர் அவதார தின ஊர்வலத்தையொட்டி சாமிதோப்பிற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அய்யா வைகுண்டர் பதியை சுற்றியுள்ள நான்கு ரத வீதிகளையும், இரு சக்கர வாகனங்களும் மற்றும் நான்கு சக்கர வாகனங்களும் நுழைய தடை செய்யப்பட்டது.
இதையடுத்து ஆங்காங்கே போலீசார் பேரிகார்டுகளை அமைத்து வாகனங்களை திருப்பி விட்டனர். இதனால் சாலையோரங்களிலும் அந்த பகுதியில் உள்ள தென்னந்தோப்புகளிலும் கார்களையும், இருசக்கர வாகனங்களையும் பொதுமக்கள் நிறுத்தி சென்று இருந்தனர்.