அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கருப்பசாமி பாண்டியன் மறைவு – எடப்பாடி பழனிசாமி இரங்கல்!

சென்னை:
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கருப்பசாமி பாண்டியன் உடல்நலக்குறைவால் காலமான நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உருப்பினரும், கழகத்தின் மீது மிகுந்த விசுவாசம் கொண்டிருந்தவரும், அனைவராலும் ‘கானா’ என்று பாசத்தோடு அழைப்பவருமான திரு. V. கருப்பசாமி பாண்டியன் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.

கழக நிறுவனத் தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களோடு மிகவும் நெருங்கிப் பழகியவரும், இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பேரன்பைப் பெற்றவருமான அன்பு அண்ணன் திரு. கருப்பசாமி பாண்டியன் அவர்கள், ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டக் கழகச் செயலாளர், கழக துணைப் பொதுச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு திறம்பட கழகப் பணிகளை ஆற்றியவர்.

அதே போல், மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக மக்கள் பணிகளை திறம்பட ஆற்றியவர். 1998-ல் திருநெல்வேலியில் கழக வெள்ளிவிழா மாநாடு எழுச்சியுடன் நடைபெற்றதற்கு, இவர் ஆற்றிய பணிகள் பாராட்டுக்குரியவை.அன்பு அண்ணன் திரு. கருப்பசாமி பாண்டியன் அவர்களை இழந்து வாடும், அவரது மகனும், கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளருமான திரு. V.K.P. சங்கர் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *